கொரோனா வைரஸ்: கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் இந்த நாடுகள் குறித்து அறிவோமா?

Report Print Fathima Fathima in உலகம்
576Shares

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் நாடு எதுவென்றால் அனைவரும் சட்டென்று சொல்லிவிடுவோம் 'அமெரிக்கா` என்று.

தொடர்ந்து கொரோனா குறித்த செய்திகளைப் படிப்பவர்கள் கோவிட்-19 நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து நாடுகளை எளிதாக பட்டியலிட்டுவிடுவார்கள். (அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா).

ஆனால், கொரொனா தொற்று மிகவும் குறைவாக இருக்கும் இந்த நாடுகள் குறித்து தெரியுமா?

அந்தந்த நாடுகள் அளிக்கும் தகவலை வைத்துத்தான் கொரோனா தொற்று குறித்த தரவுகள் தொகுக்கப்படுகின்றன.

அந்தவகையில பின்வரும் இந்த ஐந்து நாடுகளும் தங்கள் நாட்டில் 20க்கும் குறைவாக கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாக கூறுவதாக ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

மேற்கு சஹாரா
GETTY IMAGES

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, மேற்கு சஹாராவில் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு சஹாரா பகுதியானது குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி. ஒரு காலத்தில் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த இந்த பகுதி, 1975ஆம் ஆண்டு மொரோக்கோவுடன் இணைக்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து தனி நாடு அந்தஸ்து கேட்டுப் போராடி வருகிறது. 16 ஆண்டுக்கால போராட்டத்திற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு, சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவின் பேச்சுவார்த்தையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இன்னும் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஹோலி சீ
GETTY IMAGES

இங்கு கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். என்ன 'ஹோலி சீ' குறித்து கேள்விப்பட்டதே இல்ல என்று கேட்கிறீர்களா? ஒருவேளை உங்களுக்கு வத்திகான் என்று சொன்னால் தெரியும். உலகிலேயே சிறிய நாடு வத்திகான்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமாக இருக்கும் வத்திகானில்தான் அத்திருச்சபையின் தலைவர் போப் வசிக்கிறார்.

பப்புவா நியூ கினியா
GETTY IMAGES

ஏராளமான தமிழர்கள் வசிக்கும் நாடு இது. இந்த நாட்டின் அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக இருக்கும் சசீந்திரன் முத்துவேல் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் தகவலின்படி இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்நாடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவாகும். இங்கு மட்டும் 700 மொழிகள் பேசப்படுகின்றன.

80 சதவீத மக்கள் இங்கு ஊரக பகுதிகளில்தான் வசிக்கிறார்கள்.

அந்நாட்டு மக்கள் தொகை 80 லட்சம். அபரிமிதமான வன வளமும், தாது வளமும், எண்ணெய் வளமும் மிகுந்த நாடு பப்புவா நியூ கினியா. ஆனால், அங்கு வறுமையே நிலவுகிறது.

செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
GETTY IMAGES

கரீபியன் கடல் பகுதியில் இருக்கும் இந்த நாடு முன்பு பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது. ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் தகவலின் படி, இன்று காலைவரை இங்கு 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து அடிமையாக அழைத்து வரப்பட்டவர்களின் வம்சாவழியினரே இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

கடற்கரை, அழகிய நிலப்பரப்பு என ஏகாந்த சூழலில் இருக்கும் நாடு, சுற்றுலாவாசிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கிறது.

அதே நேரம், இங்கு அடிக்கடி சூறாவளியும் ஏற்படும். 269 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை 52 ஆயிரம்.

டொமினிக்கா
GETTY IMAGES

கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு. இதன் மக்கள் தொகை 73 ஆயிரம். இங்கு கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை வளம் குறைவாக உள்ள இந்நாடு, பொருளாதாரத்திற்காக வாழைப்பழத்தை நம்பியே இருக்கிறது.

சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் அனைத்தும் இந்நாட்டிலிருந்தாலும், மோசமான உள்கட்டமைப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

- BBC - Tamil

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்