2019ஆம் ஆண்டில் உலக அளவில் அனைவரையும் கலங்க வைத்த மற்றும் திருப்பி பார்க்கவைத்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்
மார்ச் 15ம் திகதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அல் நூர் மசூதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இலங்கையில் உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்தாக்குதலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எடுத்த நடவடிக்கைகள் பலரது பாராட்டுகளையும் பெற்றன.
நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.
பாரிஸ் தேவாலய தீ விபத்து
பிரான்சில் 850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் தீப்பிடித்து எரிந்ததில் மேற்கூரை முற்றிலுமாக எரிந்து இடிந்து விழுந்தது.
இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.
400 தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 15 மணிநேரம் போராடி இந்த தீயை முழுமையாக கட்டுக்குள்கொண்டு வந்தனர்.
இந்த விபத்து அதிர்ச்சியாக இருந்தாலும் பாரிஸ் மக்களுடன் துணைநிற்போம் என பிரபலங்கள் உட்பட உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்
ஏப்ரல் 21ம் திகதி உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் 253 பேர் கொல்லப்பட்டனர்.
மூன்று கிறிஸ்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.
இதில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் அடிப்படைவாத இஸ்லாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.
ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல்முறையாக இங்கிலாந்து அணி வென்றது.
வரலாறு காணாத பரபரப்போடு இந்த போட்டி நடந்து, கடைசி பந்தில் வெற்றி தோல்வியில்லாமல் சமநிலையில் முடிந்தது.
பிறகு வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் சமநிலையில் முடிந்தது.
எனவே, ஆட்டத்திலும் சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது.
அமேசான் காட்டுத்தீ
பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்தன.
பிரேசிலில் மட்டும் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்தது.
சர்வதேச நெருக்கடியாக கருதப்பட்ட இந்த பிரச்சனைக்கு உலகமே குரல் கொடுத்தன,
பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின், நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது, நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும் என டுவிட் செய்தார்.
எத்தியோப்பியா விமான விபத்து
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10ம் திகதி கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.
இதே ரக விமானம் ஒன்று இந்தியோனீசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி 190 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குள் இந்த விபத்து ஏற்பட்டது.
அரேபிய தீபகற்ப போப்பின் பயணம்
அரேபிய தீபகற்பகத்திற்கு சென்ற முதல் போப் என்ற பெருமையை பெற்றார் போப் பிரான்சிஸ்.
அபுதாபி வந்த போப்பை முடியரசர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வரவேற்றார்.
போப் பிரான்சிஸ் பங்கேற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் சுமார் 120,000 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அல் பாக்தாதி கொலை
ஐ.எஸ் அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி அமெரிக்க படைகள் சுற்றி வளைத்ததன் பின் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அவரது உடலை அமெரிக்க ராணுவம் கடலில் வீசியது, சில நாட்களுக்கு கழித்து இத்தகவலை ஐஎஸ் அ்மைப்பு உறுதி செய்த பின்னர் புதிய தலைவரை தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
முஷாரப் தூக்கு தண்டனை
தேசதுரோக வழக்கில் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஒருவேளை தூக்கிலிடப்படுவதற்கு முன் உயிரிழந்தால் உடலை தரதரவென தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள டி-சவுக் பகுதிக்கு இழுத்துச் செல்ல வேண்டுமென்றும், அங்கு முச்சந்தியில் உடலை மூன்று நாள் தொங்கவிடவேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனைதொடர்ந்து துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முஷரப், தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஐ.நா கிரேட்டா தன்பெர்க் உரை
பருவ நிலை மாற்றத்தை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி செப்டம்பர் 20ம் திகதி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பல மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செப்டம்பர் 27ல் கிரேட்டா துன்பர்க் என்ற மாணவி மொன்றியலில் நடத்திய போராட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் மட்டும் உலகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் 40 லட்சம் பேர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.