உலகில் காசில்லா பணபரிவர்த்தனை நடைபெறும் 10 நாடுகள் எவை தெரியுமா?

Report Print Arbin Arbin in உலகம்

உலகில் பல நாடுகள் காகிதமில்லா மற்றும் காசில்லா பணபரிவர்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அவற்றில் முதலிடம் வகிக்கும் 10 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

காசில்லா பணபரிவர்த்தனை நடைபெறும் நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் தென்கொரியா உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில், வாடிக்கையாளார்கள் மேற்கொள்ளும் மொத்த பணபரிவர்த்தனைகளில் 70 சதவீதம் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமே நடக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 58 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.

9-வது இடத்தில் ஜேர்மனி உள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜேர்மனியில் 76 சதவீத பணப்பரிவர்த்தனைகள் இணைய உதவியுடனேயே நடக்கிறது. ஜேர்மானியர்களில் 88 சதவீதம் பேர் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர்.

இணையவழி பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ள ஜேர்மனியில், முனிச் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் கண்டுபிடிப்பால் வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெற ஐபோன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சிப் ரீடர் எனப்படும் கருவி இருந்தாலே போதுமானது.

8-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்த வர்த்தகத்தில், 80 சதவீதமான பணப்பரிமாற்றங்கள் ஆன்லைன் மூலமே நடக்கின்றன. அந்த நாட்டில் வசிப்பவர்களில் 72 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் இருக்கின்றன.

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியமானவையாகக் கருதப்படும் ஆப்பிள், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டே செயல்படுகின்றன. பெரும்பாலான அமெரிக்கர்கள் வாலெட்டுகள் எனப்படும் ஆன்லைன் சேமிப்பு மூலமே தங்களது தினசரி செலவுகளை மேற்கொள்கின்றனர்.

7-வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. ரொக்க பணப்பரிமாற்றத்தை விட இணைய வழி பணப்பரிமாற்றத்துக்கே நெதர்லாந்து மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அங்குள்ள 98 சதவீதம் பேரிடம் வங்கிக் கணக்கு இருப்பதே இதற்கு சான்று.

6-வது இடத்தில் அவுஸ்திரேலியா உள்ளது. உலகம் முழுவதும் நவம்பர் மாதத்தில் ’நோ ஷேவ் நவம்பர்’ என கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவுஸ்திரேலியாவோ ’நோ கேஷ் நவம்பர்’ எனும் புதிய முயற்சியைக் கையிலெடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் பணக்காரரான ஆண்ட்ரூ ட்விக்கி பாரஸ்ட் என்பவர் இதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

5-வது இடத்தில் ஸ்வீடன் உள்ளது. ஸ்வீடனில் கடந்த 2008-ல் 110 வங்கிக் கொள்ளைகள் நடந்தநிலையில், 2011-ல் இந்த எண்ணிக்கை 16ஆகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுவது அங்குள்ள வங்கிகள் மற்றும் அந்நாட்டு அரசு காசில்லா பணபரிவர்த்தனைகளை ஊக்குவித்ததே.

ஸ்வீடனில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளில் 89 சதவீத பரிவர்த்தனைகள் இணையவழியே மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

4-வது இடத்தில் பிரித்தானியா உள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரித்தானியாவின் முடிவால், அந்நாட்டு பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

இணையவழி வர்த்தகத்தையே பெரிதும் நம்பியுள்ள பிரித்தானியாவில் 89 சதவீத பணபரிவர்தனைகள் காசில்லா பரிவர்த்தனைகளாகவே நடக்கின்றன. இங்குள்ள மக்களில் 88 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் உள்ளன.

குறிப்பாக லண்டன் நகர வீதிகளை அலங்கரிக்கும் டபுள் டக்கர் பேருந்துகளில் பயணிப்பதற்கான பயணச்சீட்டினை டெபிட் அல்லது கிரடிட் கார்டுகள் மூலமே பெரும்பாலான மக்கள் செலுத்துகிறார்கள். கடந்த யூலை 6 முதல் பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்தை ரொக்கமாக வாங்குவதை போக்குவரத்துத் துறை நிறுத்திவிட்டது.

இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் கனடா உள்ளது. பொருளாதார ரீதியில் பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போன கனடா அரசு, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாணயங்கள் உற்பத்தி மற்றும் புழக்கத்தில் விடுவதை நிறுத்துவதாக அறிவித்தது.

கனடாவின் மொத்த வர்த்தகத்தில் 90 சதவீத பணப்பரிமாற்றம் இணையம் வழியே நடக்கிறது. அங்குள்ள மக்களில் 88 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் இருக்கின்றன.

இந்த வரிசையில் 2-வது இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது. பிரான்ஸில் 3,000 யூரோ மதிப்புக்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

அங்கு மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளில் 92 சதவீத பரிவர்த்தனைகள் காசில்லா முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் 69 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் உள்ளன.

காசில்லா பணபரிவர்த்தனை நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் பெல்ஜியம் உள்ளது. உலக அளவில் காசில்லா பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியத்தில் 93 சதவீத வர்த்தக பரிமாற்றங்கள் ரொக்கமில்லா பரிமாற்றங்களாகவே நடக்கிறது.

பிரான்ஸைப் போலவே 3,000 யூரோக்களுக்கு அதிகமான தொகையை ஆன்லைன் பேமெண்ட் மூலமே செலவழிக்க வேண்டும் என்ற விதிமுறை பெல்ஜியத்திலும் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூடுதலாக இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு 2,25,000 யூரோக்கள் வரை கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. இங்குள்ள மக்களில் 86 சதவீதம் பேரிடம் டெபிட் கார்டுகள் இருக்கின்றன.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments