ஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார்? 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி

Report Print Basu in உலகம்
ஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார்? 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி

ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப் பதிவு, வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர், அந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

ஐ.நா. விதிமுறைகளின்படி, பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரையின் அடிப்படையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு ஐ.நா. பொதுச் செயலரைத் தேர்ந்தெடுக்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் பொதுச் செயலரை ஏற்க மறுக்கும் அதிகாரம் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு.

இந்நிலையில், இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 12 பேர் போட்டியிட்டனர். போட்டியாளர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு பேர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். இருவர் தென் அமெரிக்காவையும், ஒருவர் மேற்கு ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிமுறைகளில் இல்லாவிட்டாலும், உலகின் அனைத்துப் பிராந்தியத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், சுழற்சி முறையில் ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்தவரும் பொதுச் செயலராக நியமிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

அந்த வகையில், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் ஐ.நா.வின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளனர்.

இந்தச் சூழலில், பான் கி-மூனுக்கு அடுத்ததாக தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அடுத்த பொதுச் செயலராக வேண்டும் என்று ரஷ்யா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், இதுவரை ஒரு பெண் பொதுச் செயலர் கூட நியமிக்கப்பட்டதில்லை என்பதால், ஒரு பெண்தான் அடுத்த பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று 56 உறுப்பு நாடுகள் வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments