ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எப்படி வருமானம் வருகிறது தெரியுமா?

Report Print Peterson Peterson in உலகம்
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எப்படி வருமானம் வருகிறது தெரியுமா?

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எப்படி, எங்கிருந்து வருமானம் கிடைக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உலகில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் அதிக வருமானத்தை பெற்று பணக்கார தீவிரவாத அமைப்பாக ISIS விளங்கி வருகிறது.

வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளை கடத்தி பிணையத்தொகைகளை பெறுவது, எண்ணெய் லொறிகள் மற்றும் ஆயுதங்களை கடத்தி விற்பனை செய்வது மூலம் இவர்களுக்கு வருமானம் வருகிறது என கூறப்பட்டது.

சில நாடுகளை சேர்ந்த பெரும் புள்ளிகளும் மறைமுகமாக இந்த தீவிரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

ஆனால், இவற்றையெல்லாம் விட இந்த தீவிரவாத அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மீது கடுமையான வரிகள் மற்றும் அபராதங்களை விதிப்பதன் மூலமும் இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

உதாரணத்திற்கு, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளின் கதவை திறந்து வைத்திருந்தால், அதற்கு அபராதமாக 100 டொலர் செலுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்கள் உண்மையான இஸ்லாமியர்கள் தானா என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு அடிக்கடி ஷரியா தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

தீவிரவாதிகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தவறாக பதிலளித்தால், அதற்கு அபராதமாக 20 டொலர் தர வேண்டும். இவ்வாறு நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்படும்.

இதுமட்டுமில்லாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் மீது விஷேசமான வரிகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஒரு இஸ்லாமிய பெண்ணின் மேல் உடுப்பு மிகவும் இறுக்கமாக இருந்தால், அதற்கு 25 டொலர் வரி செலுத்த வேண்டும்.

மேலும், ஒரு இஸ்லாமிய பெண் காலுறை இல்லாமல் ’ஷு’ அணிந்தால், அவர் 30 டொலர் வரி செலுத்த வேண்டும்.

ஆண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்களுடைய தாடியை ‘ட்ரிம்’ செய்துக்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்கள் 50 டொலர் வரி செலுத்த வேண்டும்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் வரியில் இருந்து கால்நடைகளும் தப்ப முடியாது. ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆடு மற்றும் மாடுகளின் கழுத்தில் மணி கட்டியிருந்தால் அந்த விலங்கின் உரிமையாளருக்கு 10 டொலர் வரி விதிப்பதுடன் அந்த விலங்கும் பறிமுதல் செய்யப்படும்.

அதேபோல், அரசாங்கத்திற்கு பணி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 200 டொலர் முதல் 2,500 டொலர் வரை வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 90 லட்சம் மக்கள் இருந்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக குறைந்துள்ளதால் அவர்கள் மீது கட்டாயமாக திணிக்கப்படும் வரிகளும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறுதியாக, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் வருமானங்களில் சுமார் 50 சதகிதம் பொதுமக்கள் மீது விதிக்கப்படும் வரிகளால் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments