இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு! புயல் உருவாகுமா?

Report Print Murali Murali in காலநிலை

இலங்கைக்கு அருகே தாழ் வளிமண்டல குழப்பம் காரணமாக, நிலவும் மழையுடன் கூடிய காலநிலையானது அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இதன்படி, நாட்டின் பல மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில பகுதிகளில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலை பிரதேசத்தில் அதிக மழை காணப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை காணப்படும் நேரத்தில் தற்காலிகமான பலத்த காற்றுவீசக்கூடும், அத்துடன் மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, தென் தமிழகத்தில் இரண்டு மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வட கிழக்குப் பருவமழை கடந்த 27ஆம் திகதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது.

இலங்கை அருகே நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியில் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.

இதனால், தென் தமிழகத்தில் கனமழையும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில், கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்யவில்லை.

ஆனால், மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்மழையால் 25 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“அடுத்த 24-மணி நேரத்தில் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் ( ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை), புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் ( தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை நகரில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கம் இருக்கும் என்றும், அது புயலாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்றும் அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...