வவுனியாவில் மார்கழி மாதம் அதிகளவான மழை வீழ்ச்சி : வானிலை அவதானிப்பாளர்

Report Print Theesan in காலநிலை

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் டிசம்பர் மாதத்திலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா. சதானந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பில், எமது செய்தியாளர் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும்,

கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதியில் இருந்து மார்கழி மாதம் 11 ஆம் திகதிவரையான மழை வீழ்ச்சியை நோக்குகின்ற போது 23.2 மில்லிமீற்றர் அளவில் பதிவாகியுள்ளது.

எனினும் இவ் வருடம் மார்கழி மாதம் முதலாம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையான மழை வீழ்ச்சி 230.2 மில்லி மீற்றராக பதிவாகியுள்ள நிலையில் ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தின் மார்கழி மாதத்தின் முதல் 11 நாட்களிலும் பதிவாகிய மழை வீழ்ச்சியை விட இவ் வருடத்தின் மார்கழி மாதம் முதல் 11 நாட்கள் பதிவாகிய மழை வீழ்ச்சி 10 மடங்கால் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் 2018ஆம் ஆண்டு மார்கழி மாதம் முழுவதுமான மழை வீழ்ச்சியாக 178.01 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடத்தின் டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களின் மழை வீழ்ச்சியின் அளவும் அதிகமாகவுள்ளது.

அத்துடன் 2018ஆம் ஆண்டு முழுவதுமான மழை வீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் 1550.1 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதுடன் 2019ஆம் ஆண்டின் மார்கழி மாதம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்த மழை வீழ்ச்சி 1308.6 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது , என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்