ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in காலநிலை

மேற்கு - மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (போனி) நேற்று பிற்பகல் 11.30மணிக்கு வட அகலாங்கு 13.5N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.4E இற்கும் அருகில் திருகோணமலையிலிருந்து வட கிழக்காக ஏறத்தாழ 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது மேலும் கடுமையான சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய காலநிலை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில இடங்களில்100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். இது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும்.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் உயர் அலைகளுடனும் காணப்படும்.

தொகுதியின் மையப் பகுதியிலிருந்து 300 கிலோ மீற்றர் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 150-160 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 200 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும்.

இலங்கைக்கு வடக்காகவும், கிழக்காகவும், வடகிழக்காகவும், தென்கிழக்காகவும், வடமேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers