இன்றும், நாளையும் நாடு முழுவதும்..! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு

Report Print Sujitha Sri in காலநிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI” (போனி) நேற்றைய தினம் பிற்பகல் 11.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு கிழக்காக ஏறத்தாழ 580 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய காலநிலை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

போனி சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த தொகுதி மே முதலாம் திகதி வரை வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை விட்டு விலகி நகரக் கூடுவதுடன் அதன் பின் மீண்டும் படிப்படியாக திரும்பி வடகிழக்கு திசையில் நகரும் சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றும், நாளையும் நாடு முழுவதும் பலமான காற்றுடன் கூடிய நிலைமை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீற்றர்க்கும் அதிகமான மிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில்100 மி.மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோமீற்றர் வரை காணப்படும். இது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும்.

இலங்கைக்கு தெற்காகவும் தென்கிழக்காகவும் கிழக்காகவும் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோமீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

இந்த சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், உயர் அலைகளுடனும் காணப்படும். (தொகுதியின் மையப் பகுதியிலிருந்து 200-300 கிலோ மீற்றர் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும்).

இலங்கைக்கு கிழக்காகவும் தென்மேற்காகவும், தெற்காகவும், கிழக்காகவும், தென்கிழக்காகவும், வடகிழக்காகவும் வடக்காகவும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers