நாட்டின் பல பகுதிகளில் வறட்சியினால் ஐந்து இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

Report Print Mubarak in காலநிலை

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடர் முகாமைத்துவ நிலையத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

வடக்கில் ஒரு லட்சத்து 741 குடும்பங்களை சேர்ந்த, மூன்று இலட்சத்து 47,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணம், காரைநகர், ஊர்காவற்துறை, வேலணை, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய், நெடுந்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியினால் 33,165 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 9,735 பேரும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னார் மாவட்டமும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலையினால் கிழக்கு மாகாணத்தில் 42 ஆயிரத்து 778 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குருநாகல், பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும் வறட்சியினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வறட்சியுடனான காலநிலையை எதிர்கொள்ளும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.

மேலும், நீர் பிரச்சினை தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்காக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers