அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை தொடர்பான கலவரத்தை அடுத்து, ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான அழுத்தம் இறுகி வரும் நிலையில், அவர் முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்து, ஜனவரி 20-ல் ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் வரை தற்போதைய துணை ஜனாதிபதியான மைக் பென்சிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அந்த நிலையில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி டிரம்ப் தமக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தம்மை மன்னிக்கும் முடிவை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே கடும்போக்கு நபரான டொனால்டு டிரம்ப், 2016 தேர்தல் பரப்புரை ஒன்றில், நாட்டின் முக்கியமான வீதியில் நின்று பொதுமக்களில் ஒருவரை தாம் சுட்டுக்கொன்றாலும், தமக்கு பதிவாகும் வாக்குகள் எதுவும் குறைவதில்லை என வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த கருத்துக்கு கடும் கொந்தளிப்பு எழவே, அவரது சட்டத்தரணிகள், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை சுட்டிக்காட்டி அவரை காப்பாற்றியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தமக்கு தாமே மன்னிப்பு வழங்க எந்த நிபுணர்களையும் கலந்தாலோசிக்க தேவையில்லை.
தேர்தல் தொடர்பில் ரஷ்ய தலையீடு விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையிலும், டொனால்டு டிரம்ப், தம்மை தாமே மன்னிப்பது தொடர்பில் தமக்கு நெருக்கமானவர்களின் விவாதித்துள்ளார்.
தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ள நிலையில், தமது மொத்த குடும்பத்தையும் தமது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் மன்னிக்கலாம் என கூறப்படுகிறது.
அவ்வாறு நடந்தால், டிரம்ப் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் மீது அமெரிக்க நிர்வாகத்தால் குற்றவியல் விசாரணை அல்லது நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆனால் டிரம்பு தமக்கு தாமே மன்னிப்பு வழங்கினால் அது உண்மையில் ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக மாறும் என்றே அரசியல் நோக்கர்களில் கருத்தாக உள்ளது.
இருப்பினும், ஜனாதிபதி டிரம்பால் பதவி பறிப்பில் இருந்து தப்ப முடியாது என்றே கூறப்படுகிறது.
மேலும், நியூயார்க்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அவரது வருவாய் தொடர்பான வழக்கில் இருந்தும் அவர் தப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.