அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல, உள்ளநாட்டு பயங்கரவாதிகள் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனின் வெற்றிக்கு உத்தியோகப்பூர்வ ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்குவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதி தேர்தல் முடிவை எதிர்த்து தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் மூலம் டிரம்பின் வெற்றியை பைடன் தரப்பு திருடிவிட்டதாகவும் அவரது வெற்றிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் கூறி முழக்கம் எழுப்பியபடியே அவர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கினர். சற்று நேரத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து டிரம்பின் ஆதரவாளர்கள் பலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.
துப்பாக்கி சூட்டுக்கு பிறகும் நிலைமை அங்கு கட்டுக்குள் வரவில்லை போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடினர்.
இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள ஜோ பைடன், நேற்று நடந்த சம்பவம் கருத்து வேறுபாடு இல்லை. இது ஒரு மோசமான நிகழ்வு. அவர்கள் எதிர்ப்பாளர்கள் இல்லை.
அப்படி அழைக்க நாம் துணிய வேண்டாம். அவர்கள் ஒரு கலகக்கார கும்பல். கிளர்ச்சியாளர்கள். உள்நாட்டு பயங்கரவாதிகள்.
கருப்பின ஆதரவு போராட்டக்காரர்களின் ஒரு குழு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், யாரும் என்னிடம் சொல்லிவிட முடியாது, கேபிட்டலைத் தாக்கிய குண்டர்களின் கும்பலை விட அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.
அது தான் உண்மை என்று நாம் அனைவரும் அறிவோம். அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
இதனிடையே, 25 வது திருத்தத்தை உடனடியாக செயல்படுத்துவதன் மூலம் ஜனாதிபதியை நீக்க வேண்டும் என்று துணை ஜனாபதியை கேட்டுக்கொள்கிறேன் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளது இந்த விவகாரம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.