தேர்தல் தோல்வியால் துவண்ட ஜனாதிபதி டிரம்ப்: முக்கிய வழக்கில் சிக்கிய மகள் இவான்கா

Report Print Arbin Arbin in அமெரிக்கா
370Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா மீது நிதி முறைகேடு தொடர்பில் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் பதவியேற்பு விழா தொடர்பில் திரட்டப்பட்ட, அதில் இருந்து ஆதாயம் தேடக்கூடாத சுமார் 107 மில்லியன் டொலர் நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த தொகையானது ஜனாதிபதி டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஹொட்டலானது, அரசு தொடர்பான கூடுகைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூடுகைகள் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஹொட்டலில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இவை அனைத்தையும் நிர்வகித்த இவான்கா டிரம்ப், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளை மாளிகை இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

ஆனால், டிரம்ப் பதவியேற்பு விழா நிர்வாகிகள் குழுவானது, குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், திரட்டப்பட்ட நிதி முழுவதும் சுயாதீனமாக தணிக்கை செய்யப்பட்டது எனவும் அந்தத் தொகையில் எதுவும் சட்டவிரோதமாக செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், டிரம்ப் பதவியேற்ற ஜனவரி 20, 2017 அன்று மாலை, டிரம்ப் சர்வதேச ஹொட்டலில் வைத்து, இவான்கா உள்ளிட்ட டிரம்பின் மூன்று மூத்த பிள்ளைகள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு இலாப நோக்கற்ற அமைப்பு ஒன்று சுமார் 300,000 டொலர் தொகைக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாக ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

மேலும், ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு டிரம்பின் குடும்ப தொழில்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இந்த முறை முறைகேடாக நடந்துள்ளது என முக்கிய மாகாணங்களில் எந்த ஆதாரவும் இன்றி டிரம்ப் தரப்பு தொடர்ந்து வழக்குத் தொடுப்பதும்,

நீதிமன்றங்களால் நிராகரிப்பதுமாக இருந்துவரும் நிலையில், தற்போது பொதுமக்களிடம் இருந்து திரட்டபட்ட நிதி ஜனாதிபதியின் மகள் இவான்கா தவறாக பயன்படுத்தியுள்ளதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்