அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் ஒரே ஒரு திருமண நிகழ்ச்சியால் 178 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்கான சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மைனே மாகாணத்தின் Millinocket பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹொட்டல் ஒன்றிலேயே குறித்த திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமண நிகழ்வுக்கு பின்னர், அதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 7 ஆம் திகதி நடந்த இந்த திருமண விழாவினை அடுத்து, கொரோனா பாதிப்புக்கு உள்ளான 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும், 7 பேர் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி 55 விருந்தினர்கள் மட்டுமே அந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களோ, அல்லது மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களோ எவரும் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
அதிகாரிகள் தரப்பு தகவல்களை வெளியிட மறுத்தாலும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளன.
விழாவில் கலந்து கொண்ட எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
முதலில் 30 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து எண்ணிக்கை அதிகரிக்க, தற்போது 178 என பதிவாகியுள்ளது.
அந்த விழா நடக்கும் முன்னர் வரை குறித்த நகரில் கொரோனா பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல நகரங்களில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.