அமெரிக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவருக்கு தாம் வாக்களிக்கவில்லை எனவும் ஜோ பைடனுக்கே தாம் வாக்களித்ததாகவும் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஒபாமா ஜனாதிபதியாக செயல்பட்ட காலகட்டத்தில், பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்கா முன்னெடுத்த ரகசிய தாக்குதலுக்கு மேற்பார்வையாளராக செயல்பட்டவர் ராணுவ உயரதிகாரியான வில்லியம் மெக்ரவன்.
இவரே தற்போது தாம் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கல்ல, ஜோ பைடனுக்கே வாக்களித்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்தவர்.
பிரபல பத்திரிகையில் அண்மையில் இவர் எழுதி பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், உலக நாடுகளில் பார்வையில் அமெரிக்காவின் நன்மதிப்பு சீரழிந்து காணப்படுவதாகவும், பல நாடுகளும் அமெரிக்காவை ஏளனமாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் காட்டமாக பதிவு செய்திருந்தார்.
மட்டுமின்றி, அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள கருப்பின மக்களின் ஆர்ப்பாட்டமானது காலத்தின் கட்டாயம் எனவும், அதை தாம் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக முக்கியமாக, உலக நாடுகளை தைரியம், நம்பிக்கை, மரியாதை, மனத்தாழ்மையுடன் அமெரிக்கா மீண்டும் வழிநடத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் மெக்ரவன், பலமுறை டிரம்பின் விமர்சனத்திற்கும் உள்ளானதுண்டு.