ஒன்பது நாட்களுக்குப் பின் பிரசாரம்... காற்றில் பறந்த சமூக இடைவெளி: டிரம்ப் கூட்டத்தில் விதிமீறல்?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
93Shares

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்திவைத்திருந்த தேர்தல் பிரசாரத்தை ஒன்பது நாட்களுக்குப் பின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் துவங்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இருவரும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளது உறுதியானது.

இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் சிகிச்சை பெற்றதால் பிரசாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே மூன்று நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப்பைக் காண அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

20 நிமிடம் நடந்த இந்த நிகழ்ச்சியானது கொரோனா பாதிப்புக்குப் பின் டிரம்ப் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சியாக அமைந்தது.

மக்களைப் பார்த்ததும், தன் முக கவசத்தை எடுத்துவிட்டு பேசிய ஜனாதிபதி டிரம்ப், இப்போது மிகவும் நலமாக உள்ளேன். அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள் ஓட்டுப் போடுங்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர், மாஸ்க் அணிந்திருந்தனர், ஆனால் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை.

இந்த நிலையில், பொது நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றதற்கு ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களின் உடல்நலம், பாதுகாப்பு குறித்து தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதை டிரம்ப் மீண்டும் நிரூபித்துள்ளார் என ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுவாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களும், அதில் இருந்து மீண்டவர்களும் குறைந்தது 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அதை டிரம்ப் மீறியுள்ளார் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். வெள்ளை மாளிகையில் நடந்த நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியின்போதுதான், வைரஸ் பரவியிருக்க வேண்டும்.

இந்த நிலையில், டிரம்ப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பது வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என சமூக ஆர்வலர்கள் பலர் எச்சரித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்