'இதற்காக சீனா மிகப்பெரும் விலையை கொடுக்கப்போகிறது‘: எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்!

Report Print Gokulan Gokulan in அமெரிக்கா
591Shares

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சீனா கொரோனா வைரஸை பரப்பியதற்கு மிகப்பெரும் விலையை கொடுக்க போகிறது” என தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் உதவியாளர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிரம்ப் மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் டிவிட்டரில் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் கொரோனா தொற்றை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய சீனாவின் வுஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது தற்போது உலகம் முழுவதும் பரவி 10,54,674 பேரை கொன்றுள்ளது. மேலும், 36,077,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பினை கொண்டுள்ள நாடான அமெரிக்கா, 2,11,793 பேரின் உயிரை இழந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 75,49,429 ஆக உள்ளது.

“இது நடந்தது உங்கள் தவறு அல்ல, இது சீனாவின் தவறு. மேலும் இந்த நாட்டிற்கும் உலகத்திற்கும் அவர்கள் செய்ததற்கா அந்நாடு பெரிய விலையை கொடுக்கப் போகிறது. இந்த தொற்று பாதிப்பு சீனாவின் தவறு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.” என டிரம்ப் டிவிட்டரில் தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எவ்வித தகவல்களையும் இந்த காணொளியில் அவர் குறிப்பிடவில்லை. தவிர்த்து சீனா மீது தொடர் குற்றச்சாட்டுகளையும், அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கான விசா கட்டுப்பாட்டினையும் மேற்கொண்டுள்ளது. மேலும் சீனாவுக்கு எதிராக ஆசிய நாடுகளையும் ஒருங்கிணைக்கும் செயலின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேற்று சந்தித்திருந்தார்.

முன்னதாக வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த டிரம்ப் நான்கு நாட்களுக்கு பின்னர் திங்கட்கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்