அமெரிக்காவில் பொலிஸ் காவலில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சம்பவத்திற்கு காரணமான 5 பொலிஸ் அதிகாரிகள் பணி விலகியுள்ளனர்.
அமெரிக்காவின் வட கரொலினா மாகாணத்தின் சார்லட் நகரில் கடந்த ஜனவரி மாதம் போதை பொருள் தொடர்பாக ஈஸ்டர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அவர் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்களுக்கு பின்னர் ஈஸ்டர் உயிரிழந்தார்.
41 வயதான ஈஸ்டரை பொலிஸ் கைது செய்யும் போது அவர் கோகோயின் விழுங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
ஈஸ்டர், போதை பொருளை விழுங்கியிருந்த போதிலும் காவல்துறையினர் அவருக்கு எவ்வித மருத்துவ உதவியையும் செய்யாமல் தனியறையில் அடைத்து வைத்திருந்தது.
தனது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் அறையில் இருந்த டெபிள் மீது விழுந்து அதனை இறுக பற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் பொலிஸார் வெளியிட்டுள்ள வீடியோவில் காண முடிகின்றது.
அச்சூழலில் அவர், “நான் இறக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?” என உருக்கமாக கேள்வியெழுப்பியுள்ளார். இறுதியில் அவர் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரி ஜானி ஜென்னிங்ஸ், “ஈஸ்டர் பொலிஸாருடன் முழு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தால் அவருக்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஈஸ்டரின் உடல் நலத்தினை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும்.” என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கவனக் குறைவாக செயல்பட்ட 5 அதிகாரிகள் பணியிலிருந்து விலகியுள்ளனர்.