சிகிச்சையே எடுக்காமல் எச்.ஐ.வியை வீழ்த்திய முதல் நோயாளி: வியப்பில் விஞ்ஞானிகள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
927Shares

அமெரிக்காவில் எச். ஐ.வி வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட பெண்மணி ஒருவர், எந்தவொரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் அதிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த அதிசயம் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவமானது எச்.ஐ.விக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப் போராடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கையையும் வியப்பையும் அளித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் 66 வயதான லோரீன் வில்லென்பெர்க்.

இவருக்கு 1992 ஆம் ஆண்டு எச்.ஐ.வி நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் லோரீன் வில்லென்பெர்க்கின் உடல் வைரஸ் கிருமியை வெல்லும் அளவுக்கு நோயெதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது.

வைரஸ் கிருமியை ஒடுக்கப் பழகியதால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது வைரஸ் கிருமியை வென்று சாதித்துள்ளார் லோரீன் வில்லென்பெர்க்.

இதற்கு முன்பு, கலிபோர்னியாவைச் சேர்ந்த டிமோதி ப்ரௌன், லண்டனைச் சேர்ந்த ஆடம் காஸ்டில்லெஜோ ஆகிய இரண்டு பேர் மட்டுமே எச்.ஐ.வி நோய்த் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் இரண்டு பேருமே புற்றுநோய்க்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள்.

எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்ட பிறகு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுவீச்சில் இயங்கி வைரஸை அழித்தது.

ஆனால், லோரீன் வில்லென்பெர்க் எந்தவித அறுவை சிகிச்சையும், எச்.ஐ.வி க்கு எதிராக எந்தவொரு ஆண்டிவைரல் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் குணமடைந்துள்ளது ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்துள்ளது.

அவுஸ்திரேலியா, மெல்போர்னில் இயங்கும் பீட்டர் டோஹெர்டி தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்பு நிறுவனத்தின் இயக்குனரான மருத்துவர் ஷரோன் லெவின்,

சிகிச்சை பெறாமலே எச்.ஐ.வி தொற்றிலிருந்து ஒருவர் குணமடைந்திருப்பது மிகவும் புதுமையானதாக உள்ளது.

இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும். எச்.ஐ.வி.யுடன் வாழும் 37 மில்லியன் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் கண்டுபிடிப்பதில் தான் ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையான சவாலாக இருக்கப்போகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்