ஜேக்கப் பிளேக்: கருப்பின இளைஞர் மீது பாய்ந்த ஏழு குண்டுகள் - அமெரிக்காவில் மீண்டும் வெடித்த போராட்டம்

Report Print Fathima Fathima in அமெரிக்கா
292Shares

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கருப்பினத்தை சேர்ந்தவர் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜேக்கப் பிளேக் என்ற அந்த இளைஞர் மீது அந்த அந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விஸ்கான்ஸின் மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞர், ஜேக்கப் பிளேக் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் ரஸ்டன் ஷெஸ்கி என்றும், அவர் கடந்த ஏழாண்டுகளாக கென்னோஷா நகர காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

கருப்பின இளைஞர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

முன்னதாக, கென்னோஷா நகரத்திற்கு எஃப்.பி.ஐ. அதிகாரிகளை அனுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "அமெரிக்க தெருக்களில் திருட்டு, வேண்டுமென்றே தீ வைத்தல், வன்முறை மற்றும் சட்டப்பூர்வமற்ற செயல்பாடுகளை தடுப்பதற்காக" அவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

சம்பவத்தின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தை சேர்ந்த ஜேக்கப் பிளேக் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது பெண் தோழியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, தனது ஆண் நண்பர் தனது வீட்டில் இருப்பதாகவும், அதை தான் விரும்பவில்லை என்றும் ஜேக்கப்பின் பெண் தோழி காவல்துறையினரை அழைத்து கூறியதாக விஸ்கான்ஸின் மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜோஷ் கௌல் விவரித்துள்ளார்.

"இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து காவல்துறையினர் ஜேக்கப்பை கைதுசெய்ய முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவர் மீது மின்னதிர்ச்சி மூலம் தற்காலிக பக்கவாதத்தை உண்டாக்கும் கருவியை பயன்படுத்தியுள்ளனர். அதன் பிறகு, காவல்துறை அதிகாரிகளை கடந்து தனது காரின் கதவை திறந்த ஜேக்கப்பின் பின்புறத்தில் ரஸ்டன் ஷெஸ்கி என்ற அதிகாரி ஏழு முறை துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜேக்கப்பின் மீது சம்பவ இடத்திலிருந்த மற்ற அதிகாரிகள் யாரும் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. பின்னர், அவரது காரிலிருந்து கத்தியொன்று கண்டறியப்பட்டது."

எனினும், ஜேக்கப் பிளேக் குடும்ப வன்முறையை தடுக்கும் நோக்கத்துடனே அங்கு இருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜேக்கப், தனது வாழ்நாளில் "மீண்டும் நடப்பது என்பது அதிசயமான" நிகழ்வாகவே இருக்குமென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எழும் கண்டனங்கள்

கடந்த மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறையின் காவலில் கொல்லப்பட்டதால் உலகம் முழுக்க போராட்டங்கள் வெடித்தது.

மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறையினர் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார். இந்த சம்பவத்திற்கு நீதிகோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் தணிவதற்குள் இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூட்டை கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் காவல்துறை வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவை சேதத்திற்கு உள்ளாகின.

இதையடுத்து இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள அமெரிக்க நீதித்துறை, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ஜேக்கப் பிளேக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டதாக கூறி வெளியிடப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ஜப்பானின் நவோமி ஒசாகா, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் வெஸ்டர்ன் & சதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

- BBC - Tamil

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்