நாடு மொத்தமாக முடக்கப்படும் அபாயம்... 15 கோடி பேருக்கு சிக்கல்: முதன்மை மருத்துவரின் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்கா முழுவதும் 15 கோடி பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகலாம் என முதன்மை மருத்துவர் Brian Monahan எச்சரிக்கை விடுத்துள்ளதால், நாடு மொத்தம் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகமெங்கும் 135,000 பேர் இலக்காகியுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்து ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவின் முதன்மை மருத்துவர்களில் ஒருவரான பிரையன் மோனஹான், அமெரிக்காவில் மட்டும் 70 முதல் 150 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது அமெரிக்க மக்கள் தொகையில் 46 சதவிகிதம் என்ற தகவலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இதே நிலை நீடித்தால் 327 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 700,000 பேர் இறக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மனி சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் இந்த வாரம் உயர்மட்ட குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்ற எச்சரிக்கை வெளியான நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவரும் தமது நாட்டின் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே மருத்துவர் பிரையன் மோனஹான் வெளியிட்ட கருத்துகளை ஆதரித்து பேசியுள்ள நிபுணர்கள், அந்த வகையான கணிப்புகளில் நாம் உண்மையான கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 65 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். மொத்தமாக இதுவரை 1,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் இதுவரை அமெரிக்காவில் 41 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 10 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே நியூயார்க் நகரம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது போன்று காணப்படுவதாகவும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் திண்டாடும் சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுவதாகவும், விமான நிலையங்கள் அனைத்தும் மயான அமைதியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் வாஷிங்டனில் மார்ச் இறுதிவரை அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது பேய்நகரம் போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருதயம் தொடர்பான பாதிப்பால் சுமார் 650,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

காய்ச்சல் மற்றும் நிமோனியாவுக்கு சுமார் 60,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்