அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை பதவி நீக்க செய்யக் கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் இருந்து செனட் சபைக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனின் மகன் ஹண்டருக்கு சொந்தமான நிறுவனம் உக்ரைனில் செயல்படுகிறது.
அந்த நிறுவனம் மீதான ஊழல் புகாரை விசாரிக்க டொனால்டு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தால் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபரை பதவி நீக்க வகை செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானம் 228 உறுப்பினர்களின் ஆதரவுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் சபையில் இருந்து செனட் சபைக்கு நேற்று தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அடுத்த வாரம் விவாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதனால் ஜனாதிபதியை பதவி நீக்க கோரும் தீர்மானம் எளிதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே தீர்மானம் நிறைவேறுவது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.