14 மைல்கள் நடந்தே வந்து பணி செய்த ஹொட்டல் பெண் ஊழியருக்கு கிடைத்த பம்பர் பரிசு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹொட்டல் பணியாளர் ஒருவருக்கு பெயர் வெளியிடாத தம்பதி புதுக் காரை பரிசளித்துள்ள சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தினமும் வேலைக்குச் செல்வதற்காக 14 மைல் நடந்து வரும் குறித்த பெண் ஊழியரின் நிலையைப் பார்த்து, காரை அன்புப் பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.

கால்வெஸ்டனில் உள்ள டென்னிஸ் டைனர் என்ற ஹொட்டலில் பணிபுரிந்து வருபவர் அட்ரியன்னா எட்வர்ட்ஸ்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்: 'நான் இன்னும் கனவிலிருந்து மீண்டு வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, நான் என் ஜன்னலை எட்டிப் பார்க்கிறேன். வெளியே அந்தக் கார் அங்குதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன்’என்றார்.

சம்பவத்தன்று அட்ரியன்னா எட்வர்ட்ஸ் வழக்கம் போல் வேலைக்கு வந்தபோது, காலை உணவுக்காக தனது பிரிவில் ஒரு தம்பதியினர் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு உணவு பறிமாறியுள்ளார்.

பேச்சினூடே தான் கார் வாங்குவதற்காக பணம் சேமித்துக் கொண்டிருப்பதையும், தினமும் நான்கு மணி நேரம் வீட்டிலிருந்து நடந்துதான் வேலைக்கு வருவதையும் பகிர்ந்துள்ளார்.

நெடுந்தொலை நடந்து வந்துதான் எட்வர்ட்ஸ் காருக்கான பணத்தை சேர்த்து வருகிறார் என்பதை அத்தம்பதியர் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் அந்தத் தம்பதி உணவுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு கிளம்பிச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பிறகு '2011 நிசான் சென்ட்ரா' கார்ச் சாவியுடன் 'கிளாசிக் கால்வெஸ்டன் ஆட்டோ குழுமத்தின் பணியாளர் ஒருவர் எட்வர்ட்ஸை அணுகினார்.

இது உங்களுக்காக இன்று காலை உணவருந்திய தம்பதியர் பரிசளித்தது என்று சொன்ன நொடியில் சந்தோஷத்தில் வாயடைத்து திக்கு முக்காடிவிட்டார் எட்வர்ட்ஸ்.

ஆனால் காரை பரிசளித்த தம்பதி தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் அவர்களது ஒரே நிபந்தனை எட்வர்ட்ஸ் எப்போதும் போல கனிவுடன் அனைவரிடமும் பழக வேண்டும் என்பது மட்டுமே என்று கார் நிறுவனப் பணியாளர் கூறியுள்ளார்.

மனம் நெகிழ்ந்த எட்வர்ட்ஸ், நான் ஒரு நாள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைக்கு வந்தால், நிச்சயம் தேவைப்படுவோர்களுக்கு உதவுவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முன்பு குடியிருப்பில் இருந்து ஹொட்டலுக்கு வர நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆன நிலையில் தற்போது எட்வர்ட்ஸ் புதுக் காரில் அரை மணி நேரத்தில் வேலைக்கு வந்துவிடுகிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்