அமெரிக்காவில் நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், வாகனம் ஒன்றையும் கடத்தி, அதன் சாரதியை பிணைக்கைதியாக கொண்டு தப்பியபோது, சினிமாவில் வருவது போல் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு சம்பவம் அரங்கேறியது.
உள்ளூர் நேரப்படி மாலை 4.15 மணியளவில் Coral Gables என்ற இடத்தில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கியால் சுட்டு நகைகளைக் கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவத்தின்போது தரையில் மோதிய ஒரு குண்டு, பெண் ஊழியர் ஒருவரின் தலையில் பாய்ந்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்ணின் நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொள்ளையின்போது, அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு, நகைக்கடையுடன் இணைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணியை கடை ஊழியர் ஒருவர் ரகசியமாக இயக்க, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிந்துள்ளது.
ஆனால், அவர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் கடத்திய வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
ஒரு மாகாணம் விட்டு மறு மாகாணத்துக்கு, சுமார் 25 மைல்கள் தப்பிச் சென்ற கொள்ளையர்களின் வாகனம், Miramar என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசலில் தப்பியுள்ளது.
சுமார் 40 பொலிஸ் வாகனங்களில் பொலிசார் கொள்ளையர்களை துரத்தியபடி வர, போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனத்தை 19 பொலிசார் சூழ்ந்துகொண்டு துப்பாக்கியால் சுட்டு சல்லடையாக்கினர்.
இதில் இரண்டு கொள்ளையர்கள், கடத்தப்பட்ட வாகனத்தின் சாரதி மற்றும் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த காரிலிருந்த ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
வெளியாகியுள்ள வீடியோவில், சினிமாவில் வருவது போல் பொலிசார் கொள்ளையர்கள் வாகனத்தை சுட்டு சல்லடையாக்கும் காட்சியையும், பொதுமக்களில் ஒருவரை பாதுகாப்பாக தரையில் படுத்துக்கொள்ளும்படி பொலிசார் ஒருவர் கூறுவதையும் காணமுடிகிறது.