புதிய ட்ரக்கை அறிமுகம் செய்யும் விழாவில் காலை வாரிய ட்ரக்: அவமானப்பட்ட எலன் மஸ்க்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

விழா ஒன்றில் தனது புதிய தயாரிப்பான ட்ரக் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தார் டெஸ்லா நிறுவன முதன்மை செயல் அதிகாரியான எலன் மஸ்க்.

ஆஹா ஓஹோவென அவர் தனது ட்ரக்கை புகழ்ந்ததோடு, அதன் ஜன்னல் கண்ணாடி உடையவே உடையாது என புகழாரமும் சூட்டினார்.

அந்த ட்ரக்கின் உடல் மிக வலிமையான துருப்பிடிக்காத எஃகால் ஆனது என்று கூறிய எலன் மஸ்க், 9 மில்லிமீற்றர் துப்பாக்கி குண்டு கூட அதை துளைக்காது என்றார்.

அடுத்து, ட்ரக்கின் ஜன்னல் கண்ணாடி உடையாது என்பதை நிரூபித்துக்காட்டுவதற்காக உலோகம் ஒன்றினால் செய்யப்பட்ட உருண்டை ஒன்றை மொடல் ஒருவர் ஜன்னல் கண்ணாடி மீது வீச, பார்வையாளர்கள் முன்னாலேயே கண்ணாடி நொறுங்கியது.

அசௌகரியமாக உணர்ந்த எலன் மஸ்க், சரி அடுத்த கண்ணாடி மீது வீசலாம் என்று கூற, மொடல் தயங்கியவாறு அடுத்த ஜன்னல் மீது உலோகக்குண்டை வீச, அதுவும் நொறுங்கிப்போனது.

பார்வையாளர்கள் சிரிக்க, அசடு வழிந்த மஸ்க், சமையலறையில் பயன்படுத்தும் சிங்கைக் கூட இந்த கண்ணாடி மீது போட்டுப்பார்த்தோம், அப்போதெல்லாம் உடையவில்ல, இப்போது என்ன ஆயிற்று தெரியவில்லையே என்றார்.

என்றாலும், குண்டு காருக்குள் போகவில்லை என்று ஒருவழியாக சமாளித்த மஸ்க், சரி, இதையும் சரி செய்யலாம் என்றார், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்