பொலிசாரை அழைத்து பீட்சா ஆர்டர் செய்த பெண்: புரிந்துகொண்ட பொலிசார் எடுத்த சரியான நடவடிக்கை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தாயை காப்பாற்ற பீட்சா ஆர்டர் செய்வதுபோல் பொலிசாரை அழைத்த பெண்ணின் சமயோகித புத்தியும், அதை புரிந்துகொண்ட பொலிசாரின் புத்திக்கூர்மையும் ஒரு குற்றவாளியை வசமாக சிக்கவைத்துள்ளன.

அமெரிக்காவின் Oregon பகுதியிலுள்ள பொலிசாரின் அவரச உதவி மையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அழைத்த ஒரு பெண், நான் ஒரு பீட்சா ஆர்டர் செய்ய விரும்புகிறேன் என்று கூற, அழைப்பை ஏற்றவர், பீட்சா ஆர்டர் செய்ய 911ஐ அழைத்தீர்களா என்று கேட்க, ஆம் என்று கூறி, தனது முகவரியை கூற முயல்கிறார் அந்த பெண்.

பீட்சா ஆர்டர் செய்வதற்கு நீங்கள் அழைத்த எண் தவறானது என்று சற்று கோபத்துடன் பொலிஸ் உதவி மைய கால் செண்டர் ஊழியர் கூற, மறு முனையில் பேசிய பெண்ணோ, இல்லை இல்லை உங்களுக்கு புரியவில்லை என்கிறார்.

உடனடியாக அங்கு ஏதோ பிரச்னை என்பதை புரிந்துகொண்ட பொலிஸ் உதவி மைய கால் செண்டர் ஊழியர், முகவரியை கேட்டு பதிவு செய்துகொண்டு, மருத்துவ உதவி தேவையா என்று கேட்க, அந்த பெண், இல்லை பெப்பரோனியுடன் பீட்சா கொடுங்கள் என்கிறார்.

உடனே பொலிசாருக்கு தகவல் தரும் பொலிஸ் உதவி மைய கால் செண்டர் ஊழியர், சம்பந்தப்பட்ட வீட்டை நெருங்கியதும் பொலிஸ் வாகனத்தின் சைரனை அணைத்துவிட்டு அமைதியாக செல்லுமாறு அறிவுறுத்த உடனடியாக பொலிசார் அங்கு விரைகிறார்கள். நடந்த சம்பவம் இதுதான்.

அழைத்த பெண்ணின், தாயின் ஆண் நண்பரான Simon Lopez (56) என்பவர், அந்த பெண்ணின் தாயை அடித்து சுவற்றில் பிடித்து தள்ளியிருக்கிறார்.

சண்டையின்போது, அவருக்கு தெரியாமல் பொலிசாரை அழைக்க விரும்பிய அந்த பெண் பீட்சா ஆர்டர் செய்வதுபோல் பொலிசாரை அழைத்திருக்கிறார்.

சற்று தயங்கினாலும், அதை ஒழுங்காக அந்த பொலிஸ் உதவி மைய கால் செண்டர் ஊழியர் புரிந்துகொண்டதால், சரியான நேரத்தில் சென்று குற்றவாளியை கையும் களவுமாக பிடிக்க முடிந்திருக்கிறது.

அந்த அழைப்பை ஏற்ற பொலிஸ் உதவி மைய கால் செண்டர் ஊழியரான Tim Teneyck, தனது 14 ஆண்டு கால பணியின்போது இப்படி ஒரு புத்திசாலித்தனமான அழைப்பை ஏற்றதில்லை என்கிறார்.

Oregon பொலிஸ் தலைமை அதிகாரியான Michael Navarre, Teneyckஇன் பொறுமையையும் புத்திக்கூர்மையையும் பாராட்டியுள்ளதோடு, இது நல்ல டெக்னிக், ஆபத்திலிருப்போர் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார்.

அத்துடன், வார்த்தைகளால் தனது வீட்டு சூழலை விளக்காமல், தனது குரலின் தொனியாலேயே அதை உணர்த்தின அந்த பெண்ணையும் பாராட்டியுள்ளார் Navarre.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்