வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் உடல்களில் இன்னும் தோல், நகங்கள் இருப்பதை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள கிலாகிட்சோக்கின் பகுதியில் வேட்டையாட சென்ற சிலர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை கண்டறிந்தனர்.
இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அந்த பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை பழங்குடியின மக்கள் வாழ்ந்ததாகவும், கி.பி 1475 இல் இறந்துவிட்டதாகவும் கருதுகின்றனர்.
அந்த இடத்தில் இரண்டு குழந்தைகளும், ஆறு வயது வந்த பெண்களும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அதில் பலர் நெற்றி மற்றும் கன்னங்களில் பச்சை குத்தியிருந்தனர். அந்த சடலங்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் இரண்டு கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு சடலத்திற்கு இடையிலும் ஒரு விலங்கு தோல் வைக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களை கடந்திருந்த போதிலும் உடல்களில் தோல், நகங்கள் மற்றும் முடிகள் உதிராமல் அப்படியே இருப்பதால், குளிர் பகுதியாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
பல தசாப்தங்களாக ஆய்வு செய்த போதிலும், குடும்பம் எப்படி அல்லது ஏன் இறந்தது என்பதை ஆராய்ச்சியாளர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
அங்கிருந்த பழங்குடி மக்களின் வழக்கப்படி, தாய் இறந்துவிட்டால், அவருடைய குழந்தைகளையும் உயிருடன் சேர்த்தே புதைத்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி தான் அங்கு கண்டெடுக்கப்பட்ட சிறுவனும் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்புகிறார்கள்.
இந்த நிலையில் கண்டுபிரிக்கப்பட்ட மம்மிகளில் நான்கு நூக்கில் உள்ள கிரீன்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் நிரந்தர காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.