இருந்த ஒரே உறவையும் இழந்து விட்டேன்: 22 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உருக வைத்த முதியவர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் மனைவியையும் தமக்கிருந்த ஒரே உறவினரையும் இழந்து விட்டதாக முதியவர் ஒருவர் வெளியிட்ட தகவல் ஒட்டுமொத்த மாகாணத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் ஆகஸ்டு 3 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் 63 வயதான மார்கி ரெக்கார்ட். இவரது கணவரே தற்போது தமது மனைவியின் இறுதிச் சடங்கில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

அன்டோனியோ பாஸ்கோ மற்றும் மார்கி ரெக்கார்ட் தம்பதிகளுக்கு பிள்ளைகள் இல்லை என்பதாலும், சொல்லிக்கொள்ளும்படி வேறு உறவினர்கள் இல்லை என்பதாலும், தமது மனைவியின் இழப்பு கடுமையாக பாதித்துள்ளது என பாஸ்கோ தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று தமது மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த பாஸ்கோவுக்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்கோவின் அழைப்பை ஏற்று சுமார் 50 பேர் மலர் அலங்காரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி இரங்கல் தெரிவித்தும் நாடு முழுவதும் இருந்தும் தகவல்கள் வந்துள்ளன. வாழ்க்கையில் தாம் மார்கி போன்ற பெண்மணியை இதுவரை சந்தித்தது இல்லை என கூறும் பாஸ்கோ,

இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து ஒன்றாகவே இறக்க முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் காலம் அவரை முன்னரே அழைத்து சென்றுள்ளதாக பாஸ்கோ கண்கலங்கியுள்ளார்.

மார்கியின் இறுதிச் சடங்கு நடந்த அரங்கில் 200 பேர் மட்டுமே பங்கேற்க முடியும், ஆனால் சுமார் 1000 பேர் ஒன்று கூடியுள்ளனர்.

முன்னதாக பாஸ்கோவின் செய்தியை இறுதிச் சடங்கு மேற்கொள்ளும் இல்லமானது தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தது.

அதை சுமார் 10,000 பேர் பகிர்ந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்