ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு விளைவித்ததாக கூறி கூகுள் நிறுவனத்திடம் ரூ.345 கோடி இழப்பீடு கோரி ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிடும் துளசி கபார்ட் வழக்கு தொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, அடுத்தாண்டு அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே தங்களை அறிவித்துக் கொண்டு, நிதி திரட்டும் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்கள்.
இதில் மக்கள் ஆதரவை அதிகம் பெறும் வேட்பாளர்களே இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள்.
இதனிடையே, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்பி.யான துளசி கபார்ட் அறிவித்திருந்தார்.
இதற்காக துளசி நவ் நிறுவனம் என்ற தேர்தல் பிரசார கமிட்டி ஒன்றை தொடங்கினார்.
அந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் அவர் எங்கு, எப்போது பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறித்த விவரங்கள் கூகுளில் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான ஜனநாயக கட்சியின் முதல் சுற்று விவாதம் கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், தனது பிரசாரத்துக்கு இடையூறு விளைவித்ததாக கூகுள் நிறுவனத்திடம் இருந்து ரூ.345 கோடி இழப்பீடு கோரி துளசி வழக்கு தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த ஜூன் 26, 27 திகதிகளில் எனது பிரசார விளம்பரங்களை 6 மணி நேரத்துக்கு மேலாக கூகுள் நிறுவனம் முடக்கியது.
அதனால், நிதி திரட்டவும், வாக்காளர்களுக்கான செய்தியை தெரிவிக்கவும் முடியாமல் திணறடிக்கப்பட்டேன்.
இதர வேட்பாளர்களின் இ-மெயில்களுடன் ஒப்பிடுகையில், அதிகளவிலான எனது இ-மெயில்கள் `ஸ்பாம்’ அடைப்பிற்குள் இருந்தன.
முதல் சுற்று விவாதத்தில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் கூகுள் தேடுதல் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன.
ஆனால், எனது பெயர் மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டுளளது. இதற்காக, கூகுள் நிறுவனம் இழப்பீடாக ரூ. 345 கோடி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் அளித்துள்ள விளக்கத்தில், ``மோசடிகளை தவிர்ப்பதற்காக விளம்பரதாரர்களின் கணக்கில் பெரியளவிலான விளம்பர மாற்றங்கள் வரும்போது,
அவற்றை தானியங்கி முறையில் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.
பிறகு, சிறிய இடைவெளிக்கு பின்னர் அது சரி செய்யப்பட்டது, என்று கூறியுள்ளார்.