கட்டாய திருமணம்... 9 ஆண்டுகள் அடிமையாக நடத்தப்பட்ட இலங்கை பெண்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இலங்கை பெண்மணி ஒருவர் நீண்ட 9 ஆண்டுகள் அடிமையாக நடத்தப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

குறித்த இலங்கை பெண்மணிக்கு நீண்ட 9 ஆண்டுகள் ஊதியம் வழங்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, கட்டாய திருமணமும் நடத்தி வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் குடியிருக்கும் Alia Imad Faleh Al Hunaity என்ற பெண்மணி கடந்த 2009 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக இலங்கையர் ஒருவரை பணியமர்த்தியுள்ளார்.

Al Hunaity-கு சொந்தமான இரு குடியிருப்புகளையும் சுத்தம் செய்வது, அவரது மூன்று பிள்ளைகளையும் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் அந்த இலங்கை பெண்மணியை வைத்தே முடித்துள்ளார்.

ஆனால் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை எனவும், அவரை சமையல் அறையில் மட்டுமே தூங்கவும் அனுமதித்துள்ளார்.

மட்டுமின்றி விசா காலம் முடிவடைந்த பின்னரும் அவரை கட்டாயப்படுத்தி அமெரிக்காவில் தங்க வைத்துள்ளார்.

மேலும் அந்த இலங்கை பெண்மணி அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படாமல் இருக்க கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டாய திருமணமும் செய்து வைத்துள்ளார்.

நீண்ட 9 ஆண்டு காலம் அந்த இலங்கை பெண்மணியை Al Hunaity அடிமையாகவே நடத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தீதிமன்ற விசாரணைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து 6 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

இதில் Al Hunaity குற்றவாளி என நிரூபணமானது. இதில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்