வடகொரிய ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயார்!

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ மீண்டும் சந்தித்து பேச்சுவர்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா-வடகொரியா இடையே முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா பாடுபடும் என கிங் ஜாங் உன் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 27, 28ஆம் திகதிகளில் வியட்நாமில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைத்தது.

ஆனால், அமெரிக்கா அதனை நிராகரித்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வு உட்பட இருதரப்பு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் பேச்சுவார்த்தையின் போது டிரம்ப் பாதியில் எழுந்து சென்றது சர்ச்சையானது. அதன்பின்னர் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கருத்து கூறிய டிரம்ப், வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக உள்ளதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘வியட்நாம் சந்திப்பின்போது டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்றதற்கு பேச்சுவார்த்தை முறிந்ததாக பொருள் கிடையாது. அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...