எல்லைச்சுவர் பிரச்சனைக்காக முதல்முறையாக தொலைக்காட்சியில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப்!

Report Print Kabilan in அமெரிக்கா

மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக பார்க்க வேண்டும் என மக்களிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப, உள்நாட்டு நிதியில் இருந்து 57 பில்லியன் டொலர் நிதி வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், நாட்டு மக்களின் வரிப்பணத்தை இதற்காக பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின. இந்த முடக்கம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கிறது.

இதனை முடிவுக்கு கொண்டுவர தாக்கல் செய்யப்பட்ட இரு செலவின மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால், செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், தனது நிலைபாட்டை மக்கள் மன்றத்தில் முன்வைக்க நினைத்த டிரம்ப், அவரது அலுவலகத்தில் இருந்தவாறு தொலைக்காட்சி வழியாக மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘அமெரிக்கா-மெக்சிகோ இடையே பலமான எல்லைச்சுவர் இல்லாததால், இங்கு குடியேறவரும் மக்கள் வழியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்.

அவர்கள் படும் வேதனையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதை மனிதாபிமான நெருக்கடியாக கருத வேண்டும். எல்லைச்சுவர் ஒன்றினால் மட்டுமே இந்த பிரச்சனையை களைய முடியும்.

எனவே இதயத்துக்கும், ஆன்மாவுக்குமான முக்கிய பிரச்சனையாக இதை மதித்து எதிர்க்கட்சி அமைச்சர்கள் என்னை சந்தித்து பேச வேண்டும். மக்களிடம் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதல்ல’ என தெரிவித்தார்.

டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து முதல்முறையாக, தனது அலுவலகத்தில் இருந்து தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers