நிதி ஒதுக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம்! டிரம்ப் எச்சரிக்கையால் கலக்கத்தில் அமெரிக்கா

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஷட் டவுன் ஆண்டுக்கணக்கில் கூட நீடிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணத்திற்காக சுவர் எழுப்புவதற்கு நிதி கோரி செனட் சபையில் ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இதுவரை இதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இதன் காரணமாக, அமெரிக்க அரசாங்கம் காலவரையறை இன்றி மூடப்படும் என்றும், 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கட்டாய விடுமுறையில் இருக்க வேண்டும் அல்லது ஊதியமில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், செனட் சபையில் டிரம்பின் வேண்டுகோள் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 22ஆம் திகதி முதல் அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் 13 நாட்களாக தொடர்ந்து வருகிறது.

இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியமின்றி தவித்து வருகின்றனர். நேற்று மீண்டும் ஜனநாயக கட்சியினருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இதில் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆண்டுக்கணக்கில் கூட ஷட் டவுன் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எல்லைச் சுவர் எழுப்புவதற்கு எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவேன்.

அவசர நிலையைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கினால், எல்லைச் சுவரை விரைந்து கட்ட முடியும். ஷட் டவுன் போராட்டம் மேலும் நீடித்தால் இவ்வாறு செய்ய வாய்ப்புள்ளது. இத்திட்டத்தை அடைவதற்கான மற்றொரு வழி Emergency.

ஷட் டவுன் போராட்டத்தை அரசு முடக்கம் என நான் கூறமாட்டேன். நாட்டின் நலனுக்காக, பாதுகாப்பாக செய்ய வேண்டிய ஒன்று தான் இது. நான் செய்து வருவதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு அதிகபட்சமாக, அமெரிக்க அரசு 20 நாட்களுக்கு மேலாக அரசு முடங்கியது. 2013ஆம் ஆண்டு 15 நாட்களுக்கு மேலாகவும் முடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்