டிரம்பின் முடிவால் அமெரிக்காவில் தொடரும் அரசு நிர்வாக முடக்கம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்றம் அவசரமாக கூடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அங்கு அரசின் நிர்வாக முடக்கம் தொடர்கிறது.

மெக்சிகோவின் எல்லையில் அகதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் வகையில், சுவர் அமைக்கப்படும் என்று தேர்தலின் போது ஜனாதிபதி டிரம்ப் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதன்படி எல்லையில் பிரம்மாண்ட தடுப்பு சுவர் கட்டுவதற்காக உள்நாட்டு நிதி 5 மில்லியன் டொலர் வழங்க வேண்டும் என்று டிரம்ப் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், செனட் சபையில் இந்த நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அரசு அலுவலங்களின் செலவினங்களுக்கான நிதி மசோதா டிசம்பர் 21ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

மேலும் மத்திய அரசு அலுவலங்களுக்கான செலவின நிதி மசோதாவும் நிறைவேற்றப்படாததால், கடந்த சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசின் முடக்கத்தால் இதுவரை எந்த வித முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், புத்தாண்டிலும் அரசு நிர்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு மட்டும் முடங்குவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers