டிரம்பிடம் வாக்குவாதத்தில் செய்தியாளர்! அனுமதி அட்டையை ரத்து செய்ததால் பரபரப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் செய்தியாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவருக்கு வெள்ளை மாளிகையில் நுழையும் அனுமதி அட்டை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிரதிநிதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் செனட் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட CNN செய்தியாளர் அகோஸ்டா என்பவர், லத்தீன் அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் அடுத்த கேள்வியை அவர் கேட்டபோது, ‘இத்துடன் போதும்’ என டிரம்ப் அவரை இடைமறித்தார்.

எனினும், அகோஸ்டா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் வெள்ளை மாளிகையில் இருந்த பெண் உதவியாளர் எழுந்து வந்து அகோஸ்டாவிடம் இருந்து மைக்கைப் பறிக்க முயன்றார். மைக்கை அவரிடம் தராமல் அகோஸ்டோ அந்த பெண்ணை தடுத்தபோது, அவரது கை பெண்ணின் முழங்கையில் பட்டது. உடனே அதற்கு மன்னிப்பு கோரிய அகோஸ்டா மேலும் தனது கேள்விகளை தொடர்ந்தார்.

இதன் காரணமாக ஆவேசமடைந்த டிரம்ப், ‘நீங்கள் முரட்டுத்தனமான, கொடூரமான நபர். பத்திரிகைகளே இப்படித்தான். நான் மக்களுக்கு நன்மைகளை செய்தால் கூட, அதை நல்ல விதமாகக் காட்ட மாட்டார்கள்’என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அகோஸ்டாவின் பத்திரிகையாளர் அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. அகோஸ்டாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக CNN நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட மூர்க்கத்தனமான அவமதிப்பு இது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். டிரம்பின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers