அமெரிக்க அருங்காட்சியகத்தில் 7000 பூச்சிகள் திருட்டு! அதிர்ந்த ஊழியர்கள்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் சுமார் 7,000 பூச்சிகள் மற்றும் சிலந்திகள் திருடப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பூச்சிகள் அருங்காட்சியகம் மற்றும் பட்டாம்பூச்சிகள் காட்சியகத்தில் இருந்து பூச்சிகள் காணாமல் போயின.

இது குறித்து அறிந்த ஊழியர்கள் சோதனையிட்டதில் பூச்சிகள், சிலந்திகள் என சுமார் 7,000 உயிரினங்கள் அருங்காட்சியத்தில் இருந்து திருடப்பட்டதாக தெரிய வந்தது.

இந்த திருட்டு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்துள்ளது. அதன் பின்னர், இந்த திருட்டு குறித்து அறிய சி.சி.டி.வி கமெரா வீடியோக்களை பார்த்தபோது, ஊழியர்களின் உடையில் 5 பேர் இதனை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அருங்காட்சியக உரிமையாளர் ஜான் கேம்பிரிட்ஜ் கூறுகையில், ‘முதலில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த உயிரினங்கள் இல்லாததைத்தான் கவனித்தோம். சிறிது நேரத்தில் கண்காட்சியில் வைக்கப்படாத உயிரிகள் இருக்கும் சேமிப்பு அறையும் திறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தோம்.

உடனே சி.சி.டி.வி பதிவுகளை ஆராய்ந்தோம். அப்போது தான் களவு போன உயிரிகளின் மொத்த விவரமும் தெரிந்தது. வளர்ந்த, ஆரோக்கியமான ஐரோப்பிய நீல சிலந்தியின் விலை 350 டொலருக்கும் மேல்.

மெக்ஸிக சிலந்திகளின் விலை 250 டொலருக்கும் அதிகம். காண்டாமிருக கரப்பான்பூச்சி ஜோடி 500 டொலரைத் தாண்டும். இதுபோன்ற அருங்காட்சியகத்தில் காணாமல் போன உயிரினங்களின் ஒட்டுமொத்த மதிப்பு, 30 ஆயிரம் டொலரில் இருந்து 50 ஆயிரம் டொலரைத் தொடும்.

இதுதான் உலகிலேயே அதிகபட்ச வாழும் பூச்சிகள் அருங்காட்சியக திருட்டு. இதனால் அருங்காட்சியகம் உள்ள மூன்று தளங்களில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

அதில் பட்டாம்பூச்சிகளின் காட்சியகம் உள்ளது. விரைவில் புதிய உயிரிகளுடன் அருங்காட்சியகத்தை மீண்டும் உயிர்பிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

சி.சி.டி.வி வீடியோ பதிவில் 5 நபர்கள் அங்குள்ள பூச்சிகளை தாங்கள் கொண்டு வந்த பெட்டிகளில் அடைத்து, அவசரகால வெளியேறும் வழியில் தப்பித்து சென்றுவிடுகின்றனர்.

இந்நிலையில், பொலிசார் விசாரணையில் ஐரோப்பிய சிலந்தி ஒன்று மட்டும் முன்னாள் ஊழியரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனைய பூச்சிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers