என்னை பதவியில் இருந்து நீக்கினால் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

Report Print Kabilan in அமெரிக்கா

தன்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

அப்போது அவர் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் பொதுவெளியில் டிரம்புக்கு எதிராக பேசாமல் இருந்தனர்.

இதற்கு காரணம், அப்போதைய டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பெரும் தொகையை, நடிகைகளுக்கு கொடுத்தது தான் என்று புகார் எழுந்தது. மேலும் இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மைக்கேல் கோஹன், ‘வேட்பாளரின்(டிரம்ப்) அறிவுறுத்தலின்படி நடிகைகளுக்கு பணம் கொடுத்தேன்’ என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தையை மீறியதால் மைக்கேல் கோஹனுக்கு 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அரசியல் ரீதியாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘ஒருவர் சிறப்பான முறையில் பணி செய்து கொண்டிருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை.

என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்காவில் பெரிய அளவு பொருளாதாரம் சீர்குலையும். அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்