" அவள் ஒரு தேவதை " கற்றல் குறைபாடு கொண்ட சிறுமி கண் தெரியாதவருக்கு செய்த உதவி

Report Print Trinity in அமெரிக்கா

கிளாரா டேலி எனும் 15 வயது சிறுமிதான் இப்போது இணையதளங்களில் அதிகமாக வலம் வருகிறாள்.

காரணம் ஆறு மணி நேர விமான பயணத்தில் சக பயணியான டிம் குக் என்பவருக்கு உதவி செய்திருக்கிறார்.

இதிலென்ன தேவதை என்று அழைக்க இருக்கிறது என்று பலர் நினைக்கலாம். டிம் குக் கண்கள் தெரியாதவர் மற்றும் காதும் கேட்காதவர்.

பாஸ்டனில் இருந்து போர்ட்லேண்ட் வரை செல்லும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் டிம் குக் ஏறியதில் இருந்து பதட்டமாக காணப்பட்டிருக்கிறார். அவரது மன நிலையை அமைதியடைய செய்ய யாராலும் முடியவில்லை.

அங்குள்ள விமான பணிப்பெண்கள் எவ்வளவு முயன்றும் டிம் குக் பயந்தபடியே பதட்டமாக இருந்திருக்கிறார். சீட் பெல்ட் மாட்டுவது முதல் அனைத்தும் சிரமமாக இருந்திருக்கிறது.

அதனால் சைகை மொழி தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என பைலட் கேட்டிருக்கிறார். அதன்பின்தான் கிளாரா வந்தாள்.

கற்றல் குறைபாடுள்ள சிறுமியான க்ளாராவிற்கு சைகை மொழி கற்று கொள்வது அத்தனை எளிதாக இருந்திருக்கிறது. தனக்கு மிகவும் பிடித்த மொழி சைகை தான் என்று அவர் கூறுகிறார். ஆகவே விமான பைலட் அறிவித்தபின் கிளாரா எழுந்து வந்து டிம் குக்குடன் பேச முயன்றார்.

சைகை மொழியில் டிம்மின் விரல்களை பிடித்து தான் சொல்ல வந்த வார்த்தைகளை சொல்லி காட்டியிருக்கிறார். அதன்பின் ஓரளவு அமைதியான டிம் க்ளாராவுடன் சைகையில் பேச ஆரம்பித்திருக்கிறார். ஆறு மணி நேர விமான பயணம் முழுதும் அவர்கள் பேசியபடியே தங்கள் பயணத்தை முடித்துள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் கிளாரா அழகாக இருப்பாரா என டிம் கேட்க அதற்கான பதிலை டிம் விரல்களை பிடித்து சொல்வதற்குள் மிகவும் கன்னங்கள் சிவந்து வெட்கப்பட்டிருக்கிறார் கிளாரா.

பயணத்தின் இறுதி வரை டிம்மிற்கு தேவையான உதவிகளை கிளாரா செய்து கொடுத்திருக்கிறார். பயணத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில் டிம் மற்றும் கிளாரா இருவரும் தங்கள் எதிர்காலங்கள் பற்றி பேசும் அளவிற்கு நெருக்கமாகி இருக்கிறார்கள்.

இவர்களது இந்த செயல்களை அருகில் இருந்த சக பயணி படம் பிடித்திருக்கிறார். ஆர்வம் தாங்காமல் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் இந்த செய்தியை அவர் புகைப்படங்களுடன் முகநூலில் பகிர்ந்து கொள்ள 1 மில்லியனுக்கும் மேலான மக்கள் க்ளாராவின் செயலை பாராட்டியபடி பகிர்ந்து வருகின்றனர்.

இறங்கும்போது டிம் குக்கிடம் கிளாரா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவள் ஒரு தேவதை என்று எளிமையாக சொல்லியபடி நடக்க தொடங்கியிருக்கிறார் டிம்.

பயணத்தின் இறுதி ஒரு மணி நேரத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதும் நீ செய்த இந்த உதவியை பற்றி மக்கள் அதிகம் சொல்வார்கள், அதைப் பெரிதாக எடுத்து கொள்ளாதே. நீ இவ்வாறு செய்ய வேண்டியது உன் கடமை என்று டிம் சொன்னதாக கிளாரா கூறியிருக்கிறார்.

உண்மைதான். மனிதாபிமானம் என்பது மரத்து போன இவ்வுலகில் இயல்பான சில செயல்கள் கூட பெரிய உதவிகளாக பார்க்கப்படுவது காலத்தின் விளையாட்டு என்றுதான் கூற வேண்டும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers