32 ஆண்டுகளுக்கு பின் நாப்கினால் துப்புத் துலங்கிய கொலை வழக்கு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த 32 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த சிறுமியின் கொலை வழக்கு ஒன்று உணவு விடுதியில் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட நாப்கின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் அருகில் உள்ள Tacoma பகுதியைச் சேர்ந்தவர் Michella Welch. அந்தப் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றுக்குத் தனது இரு சகோதரிகளுடன் கடந்த 1986ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் தங்கைகளுக்கான உணவை எடுத்து வருவதற்காக மிதிவண்டியில் அவர் வீடு திரும்பியிருக்கிறார்.

சகோதரி இல்லாத நேரத்தில் அருகிலுள்ள கழிப்பறைக்கு அந்தச் சிறுமிகள் சென்றிருக்கின்றனர். திரும்பி வந்து பார்த்த போது சகோதரியின் மிதிவண்டி மற்றும் உணவு ஆகியவை இருக்க, அவர் மாயமானது தெரியவந்தது.

இந்தநிலையில் பூங்காவுக்கு அருகில் உள்ள ஒரு புதர் பகுதியிலிருந்து வெல்ச்-ன் சடலத்தை பொலிசார் மீட்டனர்.

விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வந்தனர். இதனிடையே சம்பவயிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட டி.என்.ஏ மாதிரியை ஜெனிடிக் ஜீனாலஜி முறைப்படி ஆய்வு செய்து ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த டி.என்.ஏ. என்பதைக் கண்டறிந்தனர்.

அந்தக் குடும்ப உறுப்பினர்கள் குறித்து விசாரித்ததில் குற்றம் நடைபெற்ற காலகட்டத்தை ஒப்பிட்டு சகோதரர்கள் இருவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகின்றனர்.

பல நாட்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பின்னர் அந்த சகோதரர்களில் ஒருவரான Gary Charles Hartman என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

கேரி ஹார்ட்மேன் உணவகத்தில் பயன்படுத்திய நாப்கின் ஒன்றை மட்டுமே ஆதாரமாக கொண்டு விசாரணையை முன்னெடுத்ததாக கூறும் பொலிசார்,

குற்றம் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட டி.என்.ஏ மாதிரியுடன் அது ஒத்துப் போவதை அடுத்தே அவர் கைதாகியுள்ளார் என விசாரணை மேற்கொண்ட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers