மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை, உயிரைக்காத்த பெண்: 20 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நடைப்பயிற்சி செய்யும் வழியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணும் காப்பாற்றப்பட்டவரும் 20 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி Azita Milanian லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள San Gabriel மலைப்பகுதியில் நடைப் பயணத்திற்காகச் சென்றார்.

திடீரென்று அவருடைய நாய் எதையோ மோப்பம் பிடித்து அவரை இழுத்துக்கொண்டு ஒரு புதரை நோக்கிச் சென்றது.

அங்கு சென்ற Azita கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அங்கே மண்ணுக்குள்ளிருந்து ஒரு குழந்தையின் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

சற்றும் தயங்காமல் மண்ணைத் தோண்டி குழந்தையை வெளியே எடுத்த Azita, குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீருடன் என்னை விட்டுப் போய்விடாதே என்று

திரும்பத் திரும்பக் கூற அந்தக் குழந்தையும் அதை புரிந்து கொண்டது போல் அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது.

Azita ஆம்புலன்ஸுக்கு போன் செய்ய, உடனடியாக வராமல் அவர்கள் தாமதிக்க, ஒரு வழியாக சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அதிர்ச்சிக்குரிய விதமாக, குழந்தையைப் பார்க்கச் சென்ற Azitaவை மருத்துவர்கள் குழந்தை வைக்கப்படிருந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. பின்னர் குழந்தை வேறொருவரால் தத்தெடுக்கப்பட்டது.

அதற்குப்பின் குழந்தை எங்கிருக்கிறான், என்ன ஆனான் என்பது Azitaவுக்கு தெரியாது.

20 ஆண்டுகளுக்குப்பின் வானொலி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இருவரும் மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.

அந்தக் குழந்தை வளர்ந்து இப்போது கல்லூரியில் படிக்கிறார், அவரது பெயர் Matthew Christian Whitaker.

Christianஐக் கண்டதும் ஓடோடிச் சென்று கட்டியணைத்துக் கொண்ட Azitaவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

Christian கொடுத்த டிஷ்ஷூவால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட அவர், உன்னைப் பார்க்க 20 ஆண்டுகள் காத்திருந்தேன், நீ எப்படி இருப்பாய், எவ்வளவு உயரம் இருப்பாய் என்றெல்லாம் நான் கற்பனை செய்து வைத்திருந்தேனோ அப்படியே இருக்கிறாய், என்னுடைய வாழ்க்கையில் வந்ததற்காக உனக்கு நன்றி, நீ என்னுடைய வாழ்க்கையையே மற்றி விட்டாய் என்று கூறினார்.

ஏனென்றால் Christianஐ மீட்டபின் Azita தேவையிலிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துவிட்டார்.

நீங்களும் என் அம்மாதான் என்று பாசம் பொங்கக் கூறிய Christian, தனது பட்டமளிப்பு விழாவிற்கு Azitaவை அழைக்க இருப்பதாகத் தெரிவித்ததோடு சமீபத்தில்தான் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும், தன்னை ஒரு தேவதை காப்பாற்றியதையும் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்குப்பின் இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த வீடியோவில் தான் எவ்வாறு Christianஐக் காப்பாற்றினார், அதற்கு முன் என்னென்ன நடந்தது என்பதைக் குறித்தெல்லாம் Azita கூறும் விடயங்கள் காண்போரை நெகிழச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்