பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம் தொடர்பில் புதிய தகவல்: இருவர் உடல்கள் மீட்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சந்தீப் மற்றும் அவரது மகள் உடலை இன்று கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வேலன்சியா நகரில் வசித்து வந்தவர் இந்தியரான சந்தீப் (42).

இவர் தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

ஆனால் அவர்கள் வழியில் மாயமானதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கடந்த 6 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

இதில் சந்தீப் கார் போன்ற ஒரு கார் ஹம்போல்ட் நகருக்கு அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து மீட்பு படையினர் அங்கு தேடும் பணியை முடுக்கி விட்டனர்.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் சவுமியா உடலை ஏல் நதியில் இருந்து 7 மைல்கள் வடக்கே கைப்பற்றினர்.

இந்நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்த மீட்பு படையினர் காணாமல் போன சந்தீப் மற்றும் அவரது மகள் சாச்சி உடலை இன்று கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக மீட்பு படை அதிகாரிகள் கூறுகையில், காணாமல் போன சந்தீப் மற்றும் அவரது மகள் சாச்சி ஆகியோரின் உடல்களை காரில் இருந்து நேற்று மீட்டுள்ளோம்.

மேலும், சந்தீப் மகன் சித்தாந்த்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதலை தொடர்ந்து நடத்தி வருகிறோம். சந்தீப் குடும்பத்தினருக்கு சொந்தமான பொருட்கள், காரின் பல பாகங்களும் மீட்கப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers