இனி வயதாகிவிட்டது என கவலை வேண்டாம்...இதோ உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

எவ்வளவு வயதானாலும் மூளையில் புதிய நியூரான் செல்கள் உருவாகலாம், அதனால் முதுமையிலும் ஞாயபக மறதியை மேற்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை அமெரிக்க அறிவியலாளர்கள் உலகுக்கு தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் மூளை செல்கள் வளர்ச்சியடைவதில்லை, சொல்லப்போனால் அவை இறக்கத் தொடங்குகின்றன என்னும் செய்தியைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டு சலிப்படைந்திருப்பீர்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி!

அமெரிக்காவின் Columbia பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், 79 வயதுள்ளவர்களுக்கும் 14 வயதுள்ளவர்களைப்போலவே புதிய மூளை செல்கள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்னிருந்த ஆய்வு முடிவுகளுக்கு முற்றிலும் மாறான இந்த முடிவுகள் மருத்துவ உலகுக்கு பல நன்மைகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Journal Cell Stem Cell ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஆய்வு, மன நலப் பிரச்சினைகள் மற்றும் அல்சீமர்ஸ் போன்ற நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பெரும் பிரச்சினைகளுக்கு சிகிச்சைகளைக் கண்டறிவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் முக்கியமான ஒருவரான Columbia பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மண்டல இணை பேராசிரியரான Dr Maura Boldrini, பல முதியவர்கள் சாதாரணமாக நம்பப்படுவதைப் பார்க்கிலும் அறிவைப் பெறுதல் மற்றும் எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் அனுபவம் வாயிலாக புரிந்து கொள்ளுதல்போன்ற திறன்களிலும் சிறந்து விளங்குவதையே இந்த ஆய்வுகள் பரிந்துரைப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

சரி, இந்த ஆய்வு என்ன சொல்கிறது?

மூளையின் கடத்து திறனுக்கு அடிப்படையாக இருப்பவை நியூரான்கள் . இந்த கடத்து திறன் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்த அளவிற்கு ஞாபக சக்தியும் இருக்கும்.

Hippocampus என்னும் மூளையின் பாகமும் இதில் இச்செயல்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கிறது. அறிவியலாளர்கள் புதிய நியூரான்கள் உருவாகாமல் போவதால் ஞாபக சக்தி குறையத் தொடங்குவதாக முன்பு எண்ணினர்.

Dr Maura Boldrini தலைமையிலான ஒரு குழுவினர், 14 முதல் 79 வயது வரையிலான, திடீரென இறந்த 28 உடல்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வில் முதன்முறையாக மொத்த Hippocampusஇலும் புதிதாக உருவாகியிருந்த நியூரான்களையும் இரத்தக் குழாய்களின் நிலைமையையும் கண்டனர்.

எனவே நாம் முன்பு நம்பியதுபோல் எல்லா முதியவர்களின் மூளை செல்களும் வயது முதிர்வின் காரணமாக மொத்தமாக இறந்து கொண்டே போவதில்லை. மாறாக புதிய செல்கள் உருவாகத்தான் செய்கின்றன.

இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று கூறியுள்ள Dr Maura Boldrini, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூட 13 வயதுக்குப் பிறகு நியூரான்கள் உருவாவது நின்று விடுவதாக தெரிவித்திருந்ததை நினைவு கூர்ந்தார்.

இந்த கண்டுபிடிப்பு இனி அல்சீமர் போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பெருமளவில் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனவே வயது முதிர்ந்தவர்கள் இனி கவலைப்படவேண்டாம். இனி, நம் மீது கவனம் செலுத்துபவர்கள் இல்லையே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு கல்வி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி நாம் மற்றவர்களின் கவனம் ஈர்க்கலாம்தானே.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்