டிக்கெட் எதுவும் இல்லாமல் விமானத்தில் பயணித்த பெண் கைது

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் இருந்து திருட்டுத்தனமாக லண்டனுக்கு பயணம் மேற்கொண்ட பெண்மணியை பொலிசார் கைது செய்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

66 வயதான மர்லின் ஹார்ட்மன் என்ற பெண்மணியே திருட்டுத்தனமாக விமானத்தில் நுழைந்து லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த திங்களன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வந்திறங்கிய அவரை கைது செய்த பிரித்தானிய அதிகாரிகள் 18 ஆம் திகதி வியாழனன்று சிகாகோவுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த பெண்மணி, விமான பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் பகுதியில் இருந்து உரிய டிக்கெட் ஏதும் இன்றி சாமர்த்தியமாக கடந்து சென்றுள்ளார்.

அதன்பின்னர் விமான நிலையத்திலேயே 2 நாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் சிக்காமல் தங்கிய அவர் அடுத்த நாள் லண்டன் விமானத்தில் நுழைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் நுழைந்த அவர் காலியான இருக்கை ஒன்றை பார்த்து வைத்துக் கொண்டு கழிவறையில் ஒளிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஹீத்ரோ விமான நிலையத்தில் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க முடியாது திணறியதால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரித்த அதிகாரிகள் அதிர்ந்துள்ளனர்.

குறித்த பெண்மணி இதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி விமானத்தில் நுழைந்து பயணம் செய்த குற்றத்திற்காக 364 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

மட்டுமின்றி இதுவரை அவர் 8 முறை இதேபோன்று விமானங்களில் அனுமதியின்றி நுழைந்துள்ளார். வீடற்ற அவருக்கு விமான நிலையங்களே பாதுகாப்பாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்