அமெரிக்காவின் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபர் அவர் தப்பித்துச் சென்ற வாகனத்திலேயே பிணமாக கிடந்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்த விமானப்படை வீரர் திடீரென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், குழந்தைகள் உட்பட 26 பேர் இறந்துள்ளதாகவும் 20 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் அவர் தப்பித்துச் சென்ற வாகனத்திலே பிணமாக கிடந்துள்ளான்.
இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், இந்த கொடூர தாக்குதலை நடத்தியவன் பெயர் டெவின் பேட்ரிக் கெல்லி(26). அவன் கடந்த 2010-ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்துள்ளான்.
தாக்குதலை அறிந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, பொலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளான். ஆனால் அங்கிருந்த நபர் ஒருவர் அவனை தூரத்தி வழிமறித்ததால், அவருக்கும், இவனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவன், தனது வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளான். அப்போது பொலிசார் அந்த வாகனத்தை பார்த்த போது டெவின் பேட்ரிக் கெல்லி இறந்து கிடந்துள்ளான்.
இதனால் அவன் தற்கொலை செய்து கொண்டானா? அல்லது அவனை துரத்திய நபர் சுட்டுக் கொன்றாரா? என்பதை பற்றி பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.
ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் அதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.