அமெரிக்காவை பாராட்டி பேசிய சீன மாணவிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவில் சுதந்திரத்தை உணர்வதாக பாராட்டி பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான கொந்தளிப்பு மிகுந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவி யாங் சூபிங்,

சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டுள்ளார்.

இவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த சீன சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள், தனது தாய் நாட்டை மாணவி யாங் இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, இம்மாணவி இனி அமெரிக்காவிலேயே தங்கி கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால், மாணவியின் மாறுபட்ட கருத்தை கேட்பது அவசியம் என்று தெரிவித்த மேரிலாண்ட் பல்கலைக்கழகம், சீன மாணவிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.

விழாவில் உரையாற்றுவதற்கு மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தால் தெரிவு செய்யப்பட்ட மாணவி யாங், சீனாவில் காற்று மாசுபாட்டை சமாளிக்க முகமூடி அணிய வேண்டியிருக்கிறது, ஆனால் அமெரிக்காவில் இனிய மற்றும் ஆரோக்கியமான காற்று வீசுவதாக தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் பேச்சுரிமைக்கு சுதந்திரம் உள்ளது. ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமை ஆகியவை எளிதாக வழங்கப்படாது. இவற்றை பெறுவதற்கு போராட்டங்கள் நடத்துவது மதிப்பு மற்றும் அர்த்தம் மிகுந்தவை' என்றும் குறிப்பிட்டார்.

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சீன மாணவர்கள் உள்பட இதனால் ஆத்திரமடைந்த சீன சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள்,

யாங் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டி, அவருக்கு பதிலடி தரும் வகையில் கருத்துகளை வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே சமூகவலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்த யாங், தனது தாய் நாட்டை ஆழமாக நேசிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும்' நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் என்னை மன்னிப்பர் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இதன் மூலம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments