”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” வியக்கவைத்த ஹாலிவுட் கலைஞர்

Report Print Maru Maru in அமெரிக்கா

ஹாலிவுட் சினிமா எடிட்டர் பிபாஷா ஷோம், இந்தியாவில் மிகவும் ஏழ்மையில் வாழும் சிலரை சந்தித்து, இதுவரை தனது முகத்தை புகைப்படத்தில் பார்த்திராத அவர்களை படம்பிடித்து, முதன்முதலாக தனது முகத்தை படத்தில் பார்க்கவைத்து, அவர்கள் புன்முறுவல் செய்வதையும் படம்பிடித்து ரசித்துள்ளார்.

இதன்மூலம், ஏழைகளை மகிழ்விக்க பெரிய திட்டங்களும் செலவுகளும் மட்டுமல்ல, சின்னச்சின்ன விஷயங்களும் இருக்கின்றன. அவை பெரிய அளவிலான ஒரு சந்தோஷத்தை தற்காலிகமாக தரமுடியும் என உணர்த்துகிறது.

முதல் காதல், முதல் முத்தம், மறக்க முடியாதது என மெய்சிலிர்ப்பவர்கள் இன்னொன்றை மறந்து விட்டனர்.

முதல் புகைப்படம்

முதல் இரண்டைவிடவும் நமது முதல் புகைப்படத்தை, வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்கும்போதுதான், அதுவரை வெளிப்படாத புதிய பாவனை முகத்தில் கொப்பளிக்கிறது. அது முகத்தையே உருக்கி வரும் சிரிப்பு.

முதல் படம் எடுத்தார்

ஒடிசாவில் உள்ள 13 ம் நூற்றாண்டு காலத்து கோனார்க் சூரிய கோயிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த ஒரு வயதான நரைத்த பிச்சைக்காரர் ஒருவரை தனது விலை உயர்வான செல்போனில் படம் எடுத்து அதை அவரிடம் பார்க்க கொடுத்தார்.

அவருடைய கைகளும் குஷ்டத்தால் சிதைந்த நிலையில் இருந்தது. அந்த நிலையிலும், தன்னுடைய முதல் புகைப்படத்தை பார்த்ததும் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நாம் சொல்வதைவிட படத்திலேயே பாருங்கள்.

அதுபோல, கொல்கத்தாவில் ஸ்வப்னா என்ற ஏழைத்தாயையும் அவருடைய 5 வயது மகனையும் படம் எடுத்துக்கொடுத்தார். அவர்கள் புற்களால் வேயப்பட்ட சிறு குடிசையில் வாழ்கின்றனர்.

அங்கு மின்சாரம், தண்ணீர் குழாய் வசதிகள் ஏதும் இல்லை. அவர்களின் புகைப்படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. அந்த பெண்ணின் திருமணத்தில் கூட போட்டோ எடுக்கவில்லை. அதனால், தன் போட்டோவை பார்த்து சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

இதுபோல, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை முதல் புகைப்படம் எடுத்து, அவர்கள் முகமலர்ச்சியை கண்டு அதில் பெரிய போதையே கொண்டார்.

நவீனங்களும் தொழில்நுட்பங்களும் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் அதன் தாக்கம் தீண்டப்படாமல் அடித்தட்டு மக்கள் இருக்கவும் செய்கின்றனர்.

இவர் படம்பிடித்த இந்த ஏழை மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான செலவில் வாழ்பவர்கள். அவர்களுக்கு உள்ள இந்த வறுமை பிரச்சினையில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வது பெரிய செலவாகும். நவீன செல்போன்கள் அவர்களுக்கு பரிட்சயம் இல்லாத விஷயம்.

அப்படி அரிதாக யாரேனும் செல்போன் வைத்திருந்தாலும் அது மிகப்பழமையான மாடல். அதில் போட்டோ எடுக்கும் வசதி இல்லாமலும் அப்படி இருந்தாலும் தெளிவற்றும் இருப்பதாக அந்த பெண்கள் கூறுகின்றனர்.

போட்டோ வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது அவர்களுடைய முதல் புகைப்படம்.

திருமணமான போது போட்டோ எடுக்காததால், இப்போது தங்கள் பிள்ளைகள் அப்பா, அம்மா திருமணத்தை கற்பனை மட்டுமே செய்துகொள்ள முடிகிறது.

அவர்களுக்கு கற்பனையை நிஜமாக்குமாறு, அப்போது திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தால் அது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். பெற்றோரின் திருமணத்தை பார்ப்பது கேமரா காலத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு. கேமரா காலத்தில் வாழ்ந்தும் அந்த வாய்ப்பை இழப்பது எவ்வளவு கொடுமை.

மாணவர்கள், இளம் வயதினர், வயதானவர்கள் என, ஆண் பெண் பாரபட்சம் இன்றி, முதல் பட தகுதிக்குரியவர்களை தானாக அணுகி படம் எடுத்துக்கொடுத்து உதவுகிறார். இதுவும் ஒருவித தானம்தான்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என அண்ணா சொன்னார். இவர்களின் வியப்பு சிரிப்பில் இறைவனை பார்த்ததற்கு ஈடான நிம்மதியை படமெடுத்த பிபாஷா ஷோம் பெற்றிருப்பார் என்பது மிகை அல்ல.!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments