கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in அமெரிக்கா
226Shares

அமெரிக்க நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றை கொடூரமாக கிழித்து பச்சிளம் குழந்தையை திருடிய பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.

கொலோராடோ மாகாணத்தில் உள்ள Boulder நகரில் மீச்செல் விக்கின்ஸ்(27) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், 2014ம் ஆண்டு இறுதியில் முதன் முறையாக மீச்செல் கர்ப்பம் அடைந்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு சோதனை செய்தபோது அது ஆண் குழந்தை என தெரியவந்துள்ளது.

மீச்செல் வசித்த இதே பகுதியில் டைனில் லேன்(35) என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவருக்கு வாலிப வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

எனினும், டைனிலின் கணவர் பிரிந்து சென்றதால், அவர் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தில், டைனில் கர்ப்பம் அடைந்துள்ளதாக தனது காதலனிடம் பொய் கூறியுள்ளார்.

இதனை காதலனும் உண்மை என நம்பி பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் திடீரென மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லலாம் எனக் காதலன் கூறியதும் டைனில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காதலனிடம் கூறிய பொய்யை உண்மையாக்க வேண்டும் என எண்ணிய டைனில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் உள்ள பச்சிளம் குழந்தையை திருட திட்டம் போட்டுள்ளார்.

இதுபோன்ற சூழலில் மீச்செல்லின் அறிமுகம் டைனிலிற்கு கிடைத்துள்ளது. மீச்செல் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளதால் அதனை பயன்படுத்த திட்டம் போட்டுள்ளார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் மீச்செல் 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது ‘என்னிடம் கர்ப்பிணி பெண்கள் அணியும் ஆடைகள் இருக்கிறது. உடனே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என மீச்செல்லிற்கு டைனில் தகவல் அனுப்பியுள்ளார்.

இதனை உண்மை என எண்ணிய மீச்செல் அவர் குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, மறைந்திருந்த டைனில் மீச்செல் மீது பாய்ந்து அவரை படுக்கையில் தள்ளியுள்ளார். பின்னர் கனமான பொருளால் மீச்செல்லின் தலையில் தாக்கியதும் அவர் மயக்கமாகியுள்ளார்.

உடனடியாக சமையலறைக்கு சென்ற டைனில் கத்தியை எடுத்து வந்து மீச்செல்லின் வயிற்றை இருப்பக்கமாக கிழித்துள்ளார். பின்னர், உள்ளே கருவறையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி பிய்த்து வெளியே எடுத்துள்ளார்.

ஆனால், இந்த கொடூரமான தாக்குதலில் குழந்தை உடனே உயிரிழந்துள்ளது. குழந்தையை தூக்கிக்கொண்ட டைனில் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரம் மயக்கத்திற்கு பிறகு கண் விழித்து பார்த்த மீச்செல் தனது உடலில் ரத்துப்போக்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளதையும், குழந்தை காணாமல் போயுள்ளதையும் அறிந்து அதிர்ச்சியுற்றார்.

கடுமையாக போராடிய மீச்செல் கைப்பேசி மூலம் பொலிசாருக்கு தகவல் அளித்துவிட்டு மீண்டும் மயக்கமுற்றார்.

சில நிமிடங்களில் அங்கு வந்த பொலிசார் மீச்செல்லை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இறந்த குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பிய அந்த இரக்கமற்ற டைனில், குழந்தையை குளியல் அறையில் உள்ள ‘Bath-tub’ல் வைத்துள்ளார்.

பின்னர், தனது காதலனை அழைத்த அவர் ‘எனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றும் ஆனால் அது உயிரிழந்து விட்டதாக’ கூறியுள்ளார்.

வீட்டிற்கு விரைந்து வந்த காதலன், குழந்தையை பார்த்து இது உண்மை என எண்ணி டைனிலை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனை சென்றதும் டைனிலின் நாடகம் அனைத்தும் அம்பலமானது. மேலும், மீச்செல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் டைனிலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை கடந்த மே மாதம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘நீதிமன்ற வரலாற்றில் இதுபோன்ற ஒரு கொடூரமான குற்றத்தை பார்த்தது இல்லை. சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள குற்றவாளி டைனிலிற்கு 100 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதிப்பதாக’ கூறி தீர்ப்பளித்துள்ளார்.

அமெரிக்க நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக முதன் முறையாக மீச்செல் பத்திரிக்கை ஒன்றிற்கு நடந்தவை அனைத்தையும் பேட்டியாக அளித்ததை தொடர்ந்து விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments