பிரித்தானியாவில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கான நான்கு படிநிலைகள் கொண்ட புதிய திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஓவ்வொரு படிநிலைக்கும் இடையில் குறைந்தமட்சம் 5 வாரங்கள் உள்ளன. முதல் நான்கு வாரங்கள் தரவுகளை சேகரித்து மதிப்பிடுவதற்கும், கடைசி வாரம் மக்களும் வணிகங்களும் அடுத்த படிநிலைக்கு செல்ல தயாராவதற்கும் ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இது பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளுக்கு பொருந்தும். ஏதேனும் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டால் மட்டும், குறிப்பிட்ட பகுதிக்கு இந்த திட்டம் மாற்றியமைக்கப்படும்.
முதல் படிநிலை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில், மார்ச் 8-ஆம் திகதி முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்படும். வெவ்வேறு விட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வெளியிடங்களில் சந்தித்துக் கொள்ளலாம், பிக்னிக் செல்லலாம். பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை சந்திக்க ஒருவர் வழக்கமாக அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாம் கட்டத்தில், மார்ச் 29 முதல் ஆறு நபர்கள் வரை பொது இடங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள். நீச்சல் குளங்களுக்கும், வெளிப்புற விளையாட்டுகளுக்கும் அனுமதிக்கப்படுவார்கள். வீட்டிலேயே தங்கவேண்டும் என்ற விதிமுறை நீக்கப்படும், உள்ளூரில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். முடிந்தவரை Work From Home செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்.
இரண்டாம் படிநிலையில், ஏப்ரல் 12-ஆம் திகதி முதல் அழகு நிலையங்கள், நூலகங்கள், pub, உணவகங்கள், உயிரியல் பூங்கா, தீம் பார்க், உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் திறக்கப்பட்டு பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தனி நபர் அல்லது ஒரே குடும்பததைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஒன்றாக செல்லலாம், சமூக இடைவெளி கடைபிடித்தல் வேண்டும்
இறுதிச் சடங்குகளில் 30 பேர் கலந்துகொள்ளலாம், திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களில் 15 பேர் வரை இருக்கலாம்.
மூன்றாம் படிப்பிலையில், மே 17-ஆம் திகதி முதல் பூங்காக்கள், தோட்டங்கள் போன்ற வெளியிடங்களில் 30 பேர் வரைக் கூடலாம்.
விளையாட்டு மையங்கள், சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் குழு உடற்பயிற்சி வகுப்புகள் மீண்டும் திறக்கப்படும்.
விளையாட்டு உள்ளரங்குகளில் பாதி சீட்களில் பறவையாளர்களை அனுமதிக்கலாம், அதுவும் அதிகபட்சம் 1000 பேர் வரை அனுமதிக்கலாம். வெளிப்புற விளையாட்டுகளில் 4000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
திருமண விழாக்களுக்கு 30 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
நான்காம் படிநிலையில், ஜூன் 21 முதல் வயது வரம்பின்றி அனைவரும் பொது இடங்களில் ஒன்றுகூடலாம், இரவு நேர கிளப்கள் திறக்கப்படும். பெரிய பொது நிகழ்சிகளை நடத்த அனுமதிக்கப்படும்.
மேலும், அப்போதைய நிலைமைக்கு ஏற்ப சமூக இடைவெளி போன்ற பொது வெளியில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இதற்கிடையில், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.