பிரித்தானியாவில் காய்கறிகள் பழங்களுக்கு தட்டுப்பாடு... புதன்கிழமை முதல் மேலும் பிரச்சினை அதிகரிக்கும் என தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
824Shares

பிரெக்சிட் முதலான பிரச்சினைகளால், பிரித்தானியாவில் காய்கறிகள் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் மேலும் பிரச்சினை அதிகரிக்கும் என வெளியாகியுள்ள தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சாலட் செய்ய பயன்படுத்தப்படும் லெட்டூஸ் வகை இலைகள், காலிபிளவர், ஆரஞ்சுகள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி, கேரட், பிரக்கோலி ஆகியவை சில பல்பொருள் அங்காடிகளில் தீர்ந்துபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிட்டுக்குப் பிந்தைய மாற்றங்களால் ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், பொருட்கள் மற்ற நாடுகளிலிருந்து வருவதை தாமதப்படுத்தியுள்ளதால் மீண்டும் டோவர் துறைமுகத்தில் ட்ரக்குகள் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலை இன்று முதல் மேலும் தீவிரமடையும் என உணவுத்துறை நிபுணர்களும், பிரெக்சிட்டுக்குப் பொறுப்பான அமைச்சரான Michael Goveம் எச்சரித்துள்ளனர்.

குழப்பம் துவங்கிவிட்டது என்று கூறியுள்ள சரக்கு போக்குவரத்து நிபுணரான John Shirley, எளிய ஒரு பொருளைக்கூட ஐரோப்பாவுக்கு அனுப்புவதை, ஜனவரி 1ஆம் திகதி கொண்டுவரப்பட்ட விதிகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கிவிட்டன என்கிறார்.

ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்ட நிலையில், பிரான்சுடனான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாவதால் இன்னும் பிரச்சினை அதிகமாகும் என்கிறது சாலைப் போக்குவரத்து கூட்டமைப்பு.

ஆவணங்கள் முறையாக நிரப்பப்படவில்லை, கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என பல காரணங்களைக் காட்டி ட்ரக் சாரதிகள் துறைமுகத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரெக்சிட் மட்டுமின்றி, காய்கறிப் பண்ணைகளில் பணிபுரிவோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது மற்றும் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தபடுவதும் உணவுத்துறையை பாதித்துள்ளது.

உணவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, புதன்கிழமை முதல் பல்பொருள் அங்காடிகளில் மேலும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டைக் காணலாம்.

ஆவண பிரச்சினைகளை அரசு சரிசெய்வதுதான் இந்த பிரச்சினை தீர ஒரே வழி, ஆனால் முக்கியமான இந்த பிரச்சினை இன்னமும் அரசின் கவனத்துக்கு செல்லவேயில்லை என்கிறார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்