தடுப்பூசி போட்டு மூன்று வாரங்களுக்குப்பின் கொரோனா தொற்று: மனமுடைந்து போன செவிலியரின் கோபம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
456Shares

வேல்ஸில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் ஒருவருக்கு மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா தொற்றியுள்ளது.

Hywel Dda பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றிவரும் அந்த செவிலியர், பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்றவே, கொரோனா பரிசோதனை செய்துகொண்டார் அவர்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டும் தனக்கு கொரோனா தொற்றியதால் கடுங்கோபம் அடைந்துள்ள அந்த செவியர் தான் மனமுடைந்துபோனதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட போராடி அப்பாயின்ட்மெண்ட் பெற்ற தான், தடுப்பூசி போட வாய்ப்புக் கிடைத்தபோது மிகவும் ஆறுதலடைந்ததாகவும், தான் தனது குடும்பத்துக்கு பாதுகாப்பை அளிக்கும் சரியான விடயத்தை செய்துள்ளதாக எண்ணியதாகவும் தெரிவிக்கும் அவர், ஆனால் உண்மையில் தடுப்பூசி போலியான ஒரு நம்பிக்கையைத்தான் கொடுத்துள்ளது என்கிறார்.

தடுப்பூசி 10 நாட்களுக்குப்பிறகே பாதுகாப்பை அளிக்கும் என தனக்கு கூறப்பட்டதாக கூறும் அவர், ஆனால், மூன்று வாரங்கள் சென்றபின் தனக்கும் தன் கணவர் மற்றும் தன் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கும் கொரோனா தொற்றியதால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தடுப்பூசியானது ஒருவர் கஷ்டப்படும் வாய்ப்பைக் குறைக்க மட்டுமே செய்யும் என்றும், எந்த ஒரு தடுப்பூசியும் 100 சதவிகிதம் செயல்திறன் வாய்ந்தவை அல்ல என்றும் கூறியுள்ளனர் மருத்துவத்துறை நிபுணர்கள்.

தடுப்பூசிகள் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பல வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறியுள்ள நிபுணர்கள், ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் மக்கள் கவனமாக இருந்து கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றவேண்டும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்